சென்னை: தேர்வுப் பணி மற்றும் மாணவர்களுக்கான பயிற்சி அளிக்கும் ஆசிரியர் தவிரப் பிற ஆசிரியர்கள் தங்களுக்குரிய மாணவர்கள் வருகைப்பதிவேடு, விடைத்தாள் திருத்தம் போன்ற பணிகளை முடித்தால் மே 20 ந் தேதிக்குப் பிறகு பள்ளிக்கு வரத் தேவையில்லை எனவும், வெளிநாடு செல்வதற்கு விண்ணப்பித்துள்ளவர்கள் செல்வதற்குத் தடையில்லை என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
கரோனா தொற்றின் காரணமாக நடப்பு கல்வியாண்டில் வகுப்புகள் செப்டம்பர் மாதம் முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. 1 முதல் 9 ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வுகள் இன்றுடன்(மே 13) முடிவடைகிறது. அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஆசிரியர்கள் மாணவர்களின் விடைத்தாள் திருத்தம் செய்து, முடிவுகளைப் பதிவேடுகளில் பதிவு செய்வதற்காக 30 ந் தேதி வரையில் பள்ளிக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர்கள் மே மாதம் முழுவதும் பள்ளிக்கு வர வேண்டிய சூழ்நிலை உள்ளது. 1 முதல் 12 ம் வகுப்பு (11ம் வகுப்பு தவிர ) வரையில் படிக்கும் மாணவர்களுக்கு ஜூன் மாதம் 13 ந் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் துவக்கப்பட உள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் பள்ளிக்கல்வித்துறை ஆணையருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், அனைத்து வகை பள்ளிகளிலும் 1 முதல் 9 வகுப்பு வரையில் மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வுகள் 13 ந் தேதியுடன் முடிந்து விட்டது. 10,11,12 ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.
பட்டதாரி ஆசிரியர்கள் 2021 செப்டம்பர் 1 ந் தேதி முதல் இன்று வரை தொடர்ச்சியாக சனிக்கிழமைகள் உள்பட தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். பொதுத்தேர்விற்கான பாட ஆசிரியர்கள் பயிற்சி அளித்தும், தேர்வு பணியும் சென்று வருகின்றனர். அதனைத் தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற உள்ளது. ஆசிரியர்கள் கோடை விடுமுறை இல்லாமல் பணியாற்றி வருவதால், சோர்விற்கு உள்ளாகி விடுகின்றனர். எனவே தேர்வுப் பணி இல்லாத நாட்களில் தேர்வுக்குப் பயிற்சி அளித்து வரும் ஆசிரியர்கள் தவிர்த்து பிற ஆசிரியர்களுக்கு சுழற்சி முறையில் பணிக்கு வர அனுமதி அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
வேலை முடித்துவிட்டால் விடுமுறை: இதனைத் தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அலுவலகம் அனுப்பி உள்ள உத்தரவில், 1 முதல் 9 ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு இன்று கடைசி வேலைநாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் விடைத்தாள் திருத்தம், வருகைப்பதிவேட்டை சரிசெய்தல், தேர்வு முடிவுகளைத் தயார் செய்தல் போன்ற பணிகளை ஆசிரியர்கள் மே 20 ந் தேதி வரையில் மேற்கொள்ள வேண்டும்.
மேலும் மே 20 ந் தேதிக்கு முன்னரே பணிகளை முடிக்கும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரத்தேவையில்லை. வெளிநாடு செல்வதற்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்கு எந்தவித தடையும் இல்லை. 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு நாளை முதல் விடுமுறை எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி- பதக்கம் வென்ற நரிக்குறவர் மாணவிகள்