கலைவாணர் அரங்கத்தில் இன்று தேசிய வாக்காளர் நாள் கொண்டாடப்பட்டது. விழாவில் கலந்துகொண்டு பேசிய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், கட்சியோ, வேட்பாளரோ தேர்தல் ஆணையம் நிர்ணயம் செய்த தொகைக்கு மேலே செலவு செய்யக்கூடாது என்பதை நீதிமன்றத்தின் மூலம் சட்டத்தில் இருந்த ஓட்டையை தான் அடைத்ததாகத் தெரிவித்தார்.
மாணவர்கள் நினைத்தால் வாக்குக்கு பணம் கொடுப்பதைத் தடுக்கலாம் எனவும், வாக்களிக்கச் செல்லாத தங்கள் பெற்றோரை வாக்களிக்கச் செய்யலாம் எனவும் கூறிய அவர், நேர்மையான, வெளிப்படையான தேர்தல் நடைபெற மாணவர்களின் பங்களிப்பு மிக முக்கியமான ஒன்று எனவும் தெரிவித்தார்.
பின்னர் பேசிய தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம், மக்கள் தங்களுடைய வாக்கின் மதிப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் எனவும், சாதி, மதப் பாகுபாடுகளை களைந்து நல்லவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் கூறினார்.
அரசியல் ஆதாயத்திற்காக சாதி, மதங்களை கையில் எடுத்து, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மக்களை மூளைச் சலவை செய்கிறார்கள் எனவும் அவர் ஆதங்கப்பட்டார்.
அரசியல் கட்சிகள் சில, அரசியல் ஆலோசகர்களை பயன்படுத்துவதைச் சுட்டிக்காட்டிய அவர், மக்களுக்கு என்னத் தேவை என அறிந்து, மக்களை அணுகுவதை விட்டுவிட்டு, ஆலோசகர்களை நம்பி இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் வாக்காளர் நாள் புத்தகத்தை வெளியிட்டு, தேர்தல் பணிகளை சிறந்த முறையில் மேற்கொண்ட மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு ஆளுநர் விருது வழங்கினார். மேலும் வாக்காளர் நாளையொட்டி தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: டெல்லி தேர்தல்: தொண்டர் வீட்டில் சாப்பிட்ட அமித்ஷா!