சென்னை: தமிழ்நாட்டில் உள்ள தனியார் மருத்துவமனைகள், ஆய்வகங்களில் கரோனா தொற்றைக் கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டணத்தைக் குறைத்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அரசாணையில், "உலக சுகாதார அமைப்பு தற்பொழுதுள்ள கோவிட் தொற்று பாதிப்பினை உலகளாவிய பொது சுகாதார பேரிடராகவும், இதனைக் கட்டுப்படுத்தக்கூடிய நிகழ்வாகவும் அறிவித்துள்ளது.
பரிசோதனை கட்டணம்
இதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசும், பொது சுகாதார சட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் கோவிட் 19 தொற்றை பட்டியலிடப்பட்ட நோயாக அரசிதழில் வெளியிட்டுள்ளது.
மேலும், கோவிட் 19 தொற்றுப் பரவலைத் தடுக்கும் நோக்குடன் பெருவாரியாக பரவும் தொற்றுச் சட்டம் 1897ன் படி வழிகாட்டுதல் நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது.
கோவிட் 19 தொற்று உறுதிப்படுத்தும் ஆர்டிபிசிஆர் கட்டணத்தைக் குறைத்து அரசு நிர்ணயம் செய்கிறது. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், கோவிட் தொற்றினை உறுதிப்படுத்தும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்வதற்கான கட்டணம் 550 ரூபாயில் இருந்து 400 ரூபாயாகவும், குழு மாதிரிகளுக்கு 400 ரூபாயிலிருந்து 150 ரூபாயாகவும் குறைத்து நிர்ணயம் செய்யப்படுகிறது.
கட்டணம் குறைப்பு
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டப் பயனாளியாக இல்லாதவர்கள், தனியார் ஆய்வுக் கூடங்களில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்தவற்கான கட்டணம் 900 ரூபாயிலிருந்து 700 ரூபாய் ஆக குறைத்து நிர்ணயம் செய்யப்படுகிறது.
மேலும், வீட்டிற்குச் சென்று பரிசோதனை செய்வதற்குக் கூடுதலாக 300 கட்டணம் நிர்ணயம் செய்யப்படுகிறது” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அண்ணாமலைக்கு டஃப் கொடுக்கும் பாமக எம்.எல்.ஏ - 'லைட், கேமரா,ஆக்ஷன்' சொன்ன ஆதரவாளர்கள்!