இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, “ சேலம் மாவட்ட அம்மா உணவகங்கள் அனைத்திலும் அதிமுக சார்பில் விலையில்லா உணவு வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் அதிமுக சார்பில் விலையில்லா உணவு வழங்கப்படும் என்று உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜ் அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்புகள் அரசின் சார்பில் எந்த அடிப்படையில் செய்யப்பட்டது என்று தெரியவில்லை.
அம்மா உணவகங்கள், மலிவான விலையில் ஏழை எளிய மக்களுக்காக உணவு வழங்குவதற்காக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட திட்டமாகும். ஆனால் அத்திட்டத்தின் மீது உரிய கவனம் செலுத்தாத காரணத்தாலும், போதிய நிதி ஒதுக்காத நிலையிலும் அம்மா உணவகங்கள் முடங்கிய நிலையில், தற்போது திடீரென்று அம்மா உணவகத்தில் கட்சியின் மூலமாக விலையில்லா உணவு வழங்க அனுமதிப்பது சட்டவிரோத செயலாகும். எனவே இந்த அறிவிப்பை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்.
அம்மா உணவகத்தில் விலையில்லா உணவு வழங்க அதிமுகவுக்கு வழங்கப்பட்ட அனுமதி மற்ற அரசியல் கட்சிகளுக்கும் வழங்கப்படுமா? அம்மா உணவகம் என்பது அரசுக்குச் சொந்தமானது. அதை ஆளும்கட்சி தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தக் கூடாது. ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்க வேண்டும் என்று அரசுக்கு அக்கறை இருக்குமானால் ஏற்கனவே நடத்தியதைப்போல அம்மா உணவகங்களை உரிய நிதி ஒதுக்கி சிறப்பாக நடத்த வேண்டும்.
கரோனா நோய் தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்தவர்களின் இறுதிச் சடங்குகளை நடத்தவிடாமல் எதிர்ப்புகள் எழுந்துவருவது மக்களிடையே அச்சமும் பீதியும் அதிகரித்துவருவதுதான் காரணமாகும். இத்தகைய போக்கு நீடிக்க அனுமதிப்பது கரோனா நோயை எதிர்த்து அர்ப்பணிப்பு உணர்வோடு சிகிச்சை அளிக்க போராடிக்கொண்டிருக்கும் மருத்துவர்கள், செவிலியர், துப்புரவுப் பணியாளர்களை மனரீதியாக சோர்வடையச் செய்யும். எனவே இத்தகைய மனிதாபிமானமற்ற, அநாகரிகமான செயல்களை அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: செய்தியாளர் சந்திப்பை அரசு கைவிட வேண்டும் - ராமதாஸ்