நாடு முழுவதும் கரோனா தொற்றின் கோரத் தாண்டவத்தால் பல்வேறு பகுதிகளில் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கரோனா இரண்டாவது அலை வேகமெடுத்துள்ள நிலையில், அரசு அதனை தடுப்பதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறது.
தடுப்பூசி பணி மும்முரம்
இருப்பினும் தினசரி பாதிப்பு 25 ஆயிரத்தைத் தாண்டியுள்ள நிலையில், கரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. மறுபக்கம் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியும் மும்மரமாக நடைபெற்றுவருகிறது. தமிழ்நாட்டில் இதுவரை சுமார் 63.28 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் கனிவான வேண்டுகோள்
இந்நிலையில் இன்று(மே.8) காலை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வரும் மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு விதித்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை பொதுமக்கள் அனைவரும் முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் ட்விட்டரில் வேண்டுகோளும் விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டிற்கு ஆக்ஸிஜன் கிடைக்கும்
இதற்கிடையில் தமிழ்நாட்டில் கரோனா நோயாளிகளுக்கான ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டை தடுக்கும் விதமாக, 500 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் வழங்க வேண்டும் என, முதலமைச்சர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். தற்போது அது கிடைக்கும் என பிரதமர் உறுதியளித்துள்ளார்.