சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் நடைபெற்ற விழாவில், புற்றுநோய் சிகிச்சைக்கான கருவிகள், கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார். ஆறு கோடி ரூபாய் மதிப்பிலான கதிர்வீச்சு புற்றுநோய் சிகிச்சை வளாகம், 22 கோடி ரூபாய் மதிப்பில் லீனியர் ஆக்சலேட்டர் கருவி, சி.டி. சிமுலேட்டர் கருவிகளை அவர் தொடங்கிவைத்தார்.
அதனைத் தொடரந்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள, 20 கோடி ரூபாய் மதிப்பிலான லீனியர் ஆக்சலரேட்டர் கருவியை காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கிவைத்தார்.
லீனியர் ஆக்சலரேட்டர் கருவியைப் பொறுத்தவரை, புற்றுநோயாளிகளுக்கு கதிர்வீச்சு செலுத்தும்போது மற்ற உறுப்புகளுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு மிகத் துல்லியமாகப் புற்றுநோய் பாதிக்கப்பட்ட இடத்தில் மட்டும் கதிர்வீச்சினை செலுத்தும். இக்கருவியின் மூலம் கதிர்வீச்சு பாய்ச்சுவதற்கு முன், சி.டி. சிமுலேட்டர் என்ற துணைக் கருவி, சிகிச்சை திட்டமுறை என்ற மென்பொருள் அடிப்படையில் உருவாக்கப்பட்ட அமைப்பின் மூலம், அனைத்து விவரங்களும் பதிவிடப்பட்டு அவ்விவரங்கள் நேரியியல் முடிக்கி கருவிக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிப்பதால் துல்லியமாக சிகிச்சை அளிக்க முடியும் எனக் கூறப்படுகிறது. தனியார் மருத்துவமனையில் பல லட்ச ரூபாய் செலவில் பெறக்கூடிய இந்த சிகிச்சை, அரசு மருத்துவமனையில் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் இலவசமாக வழங்கப்படவுள்ளது.
ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனை, ராயப்பேட்டை மருத்துவமனையைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் அரசு அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனை, சென்னை ராஜிவ் காந்தி அரசுப் பொதுமருத்துவமனை, மதுரை அரசு இராசாசி மருத்துவமனை, கோவை, தஞ்சை, நெல்லை, தூத்துக்குடி, சேலம் மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் விரைவில் இந்தக் கருவிகள் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர், அமைச்சர்கள், சுகாதாரத் துறைச் செயலர் பீலா ராஜேஷ், அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: 'கொடுத்ததும் நீங்கதான்... பறிக்க நினைப்பதும் நீங்கதான்' - கிராம மக்கள் வேதனை