13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நடைபெறும் நாடுதழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, அண்ணா சாலை சிம்சனில் உள்ள தந்தை பெரியார் சிலை அருகில் மாணவர் கூட்டமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திமுக மாணவரணி, திராவிடர் கழக மாணவரணி, இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றபோது அவர்களைக் காவல் துறையினர் தடுத்தனர்.
இதனையடுத்து, காவல் துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. காவல் துறையின் தடுப்பையும் மீறி சாலையில் அமர்ந்த மாணவர் அமைப்பினர் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக மாணவரணிச் செயலாளர் எழிலரசன், ”இந்தியா முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு உள்ளிட்டவற்றை எதிர்த்து போராட்டம் நடைபெற்றுவருகிறது.
இந்தியா பெருமைவாய்ந்த நாடாகவும், மதச்சார்பற்ற நாடாகவும், மனித நேயமிக்க நாடாகவும் இருக்க வேண்டும். இதற்காக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்க வேண்டும். ஆளும் ஃபாசிச பாஜக அரசு தன்னைத் திருத்திக் கொண்டு குடியுரிமை திருத்தச் சட்டத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். இல்லாவிட்டால் இந்தப் போராட்டம் மேலும் மேலும் பெருகும்” எனத் தெரிவித்தார்.
பின்னர், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் அமைப்பினர் அனைவரையும் காவல் துறையினர் கைதுசெய்தனர்.
இதையும் படிங்க: வேலை நிறுத்தத்தால் வெறிச்சோடிய வருமான வரித்துறை அலுவலகம்