சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் சதானந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன் (56). இவருக்கு திருமணமாகி முன்று பெண் குழந்தைகள் உள்ளனர். பாண்டியன் 20 வருடங்களாக, குவைத்தில் பிரிண்டிங் பிரசில் பணிபுரிந்து வருகிறார். திடீரென நேற்று (ஏப்ரல் 27) இரவு மாரடைப்பால் உயிரிழந்தார்.
இந்தத் தகவலை குவைத்திலிருந்து சென்னையில் உள்ள அவரது மனைவி கீதாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தற்போது ஊரடங்கு உத்தரவால் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதால், குவைத்தில் இருந்து பாண்டியன் உடலை தமிழ்நாட்டிற்கு கொண்டுவர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
தன்னுடைய கணவன் உடலை கடைசியாக பார்க்க வேண்டும் என்பதற்காக, இங்கு அவர் உடலைக் கொண்டுவர வேண்டும் என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்குத் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
மத்திய, மாநில அரசும் இணைந்து செயல்பட்டு தன்னுடைய கணவன் உடலை தமிழ்நாட்டிற்கு கொண்டுவந்து தரும்படி பாண்டியனின் மனைவி கீதா, அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.