சென்னை: தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் முதலமைச்சரின் கரோனா நிவாரண நிதியாக ரூ. ஒரு கோடியே 50 லட்சத்து 30 ஆயிரத்து 127 ரூபாய்க்கான காசோலையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (ஆக. 03) வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க செயலாளருமான தியாகராஜன் கூறுகையில், "கரோனா தொற்று இரண்டாம் அலையினால் தமிழ்நாட்டில் அதிகப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
முதலமைச்சர் நிவாரண நிதி
தமிழ்நாடு அரசின் சார்பில் தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதற்கு உறுதுணையாக இருக்கும் வகையில் ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பிலும், தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் சார்பிலும் முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. ஒரு கோடியே 50 லட்சத்து 30 ஆயிரத்து 127 தொகைக்கான காசோலையை முதலமைச்சரிடம் வழங்கியுள்ளோம்.
ஆசிரியர்கள், பள்ளிக்கு வரத் தயாராக உள்ளோம். பள்ளிக்கு வருவதில் எந்தத் தயக்கமும் நாங்கள் காட்டவில்லை. பெருந்தொற்று காலத்தில் படிப்பைவிட மாணவர்களின் விலைமதிப்பில்லாத உயிர்கள் மட்டுமே முக்கியம். எனவே, தமிழ்நாடு அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம்.
தவறு செய்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்
ஆன்லைன் கல்வி முறையில் முறைகேடுகள் நடந்திருப்பது உண்மைதான். அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகின்றது. தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்.
ஆன்லைன் கல்வி முறையை ஒழுங்குபடுத்த இதற்காக தமிழ்நாடு அரசின் சார்பில் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வர்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: '69% இட ஒதுக்கீடு விவகாரம்: மத்திய அரசு விளக்கமளிக்க உத்தரவு'