கரோனா, புயல் மற்றும் ஜனவரி மழையால் கடும் பாதிப்புக்கு உள்ளான தமிழ்நாடு விவசாயிகளின் கடன் சுமையை முற்றிலும் குறைத்திடும்விதமாக 12,110 கோடி ரூபாய் கூட்டுறவுப் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேரவையில் 110 விதியின்கீழ் அறிவித்துள்ளார். இதன்மூலம் கூட்டுறவு வங்கியில் கடன் பெற்ற 16.43 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவார்கள்.
நிவர், புரெவி புயல்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரணம் அறிவித்து அதனை ஏக்கருக்கான உச்சபட்ச அளவையும் நீக்கி அறிவிப்பு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது முறையாக விவசாயப் பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்த ஒரே அரசு அதிமுக அரசுதான் என்று எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்தார்.
அவர் சொன்னார்; நான் செய்தேன் மேலும் அவர், "நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின்போது, நாங்கள் வெற்றிபெற்று வந்தவுடன், விவசாயிகள் கூட்டுறவுச் சங்கங்களில் வாங்கிய பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று எதிர்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார்.
நாடாளுமன்றத் தேர்தலில் அவரது கட்சியினர் 38 இடங்களில் கூட்டணியைச் சேர்ந்தவர்கள் வெற்றிபெற்றனர் . வெற்றிபெற்றவுடன், மக்களுக்கு அளித்த வாக்குறுதியை மறந்தார்கள். இதுதான் அவர்கள் ஒவ்வொரு தேர்தலின்போதும் கடைப்பிடிக்கும் வாடிக்கை. தேர்தலின்போது அளிக்கப்படும் வாக்குறுதியை நிறைவேற்றும் ஒரே அரசு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசுதான் என்பதைத் தமிழ்நாடு மக்கள் நன்கு அறிவார்கள்" எனக் கூறினார்.
'சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல் 2021' இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில் இந்த அறிவிப்பு அரசியல் அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.