சென்னை: தாய்லாந்து நாட்டில் உள்ள ஒரு நிறுவனத்தில் நல்ல சம்பளத்துடன் வேலை கொடுப்பதாக சமூக வலைத்தளங்களில் வந்த தகவலை நம்பி, தமிழ்நாட்டைச் சேர்ந்த 18 பேர் சம்பந்தப்பட்ட முகவர்களிடம் ஒன்றரை லட்சம் முதல் இரண்டரை லட்சம் ரூபாய் வரை செலுத்தியுள்ளனர். பின்னர், சுற்றுலா பயண விசா மூலமாகப் பணம் செலுத்திய நபர்களை துபாய் வழியாக பேங்காக்கிற்கு அழைத்துச்சென்று, பின் அங்கிருந்து சட்டவிரோதமாக மியான்மர் நாட்டிற்கு கடத்திச்சென்றுள்ளனர்.
அங்கு இவர்களை மிரட்டி, சைபர் குற்றங்கள் உட்பட பல்வேறு சமூக விரோதச்செயல்களில் ஈடுபட வைத்துள்ளனர். இதேபோல, கம்போடியா நாட்டில் உள்ள ஒரு பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தில் வாடிக்கையாளர் சேவை அலுவலர் வேலை வாய்ப்பு உள்ளதாகக்கூறி, முகவர்கள் மூலம் ஆட்களை தேர்வு செய்து, அவர்களை கம்போடியா நாட்டிற்கு அழைத்துச்சென்று சட்டவிரோதச்செயல்களில் ஈடுபட வைத்துள்ளனர்.
இவ்வாறாக, வெளிநாட்டில் சிறைப்பிடிக்கப்பட்டு இருக்கும் தமிழ்நாட்டு இளைஞர்களின் வீடியோ காட்சிகள் மற்றும் உறவினர்களின் புகாரின் அடிப்படையில் தமிழ்நாடு காவல் துறை மற்றும் இந்திய தூதரகத்தின் உதவியுடன் அவர்கள் மீட்கப்பட்டனர். குறிப்பாக கம்போடியா நாட்டிலிருந்து 13 பேரும், தாய்லாந்து நாட்டிலிருந்து 29 பேரும் மீட்கப்பட்டு தமிழ்நாட்டிற்குக் கொண்டுவரப்பட்டனர். வெளிநாட்டில் சிக்கித்தவித்த இவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் மோசடிக்கு உதவியாக இருந்த திருச்சியில் இயங்கி வரும் கேர் கன்சல்டன்சி நிறுவனத்தைச்சேர்ந்த முகவர்கள் ஆணவாஸ் மற்றும் முபாரக் அலி ஆகியோரை தமிழ்நாடு போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாகக் கூறி, அழைத்துச் செல்லும் நபர்களிடம் உஷாராக இருக்க வேண்டும் என தமிழ்நாடு காவல் துறை டிஜிபி சைலேந்திரபாபு விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். வெளிநாட்டில் 3,4 லட்ச ரூபாய் சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக மோசடி கும்பல் கூறி, சுற்றுலா விசாவில் அழைத்துச்சென்று, அங்கு ஆன்லைன் லோன் ஆப், மேட்ரிமோனி மற்றும் கிரிப்டோ கரன்சி போன்ற சைபர் கிரைம் மோசடி வேலைகளில் ஈடுபடுத்த வைப்பதாகவும், குறிப்பாக வேலைக்குச்செல்லும் நபர்களின் இமெயில் ஐடி, வாட்ஸ்அப் எண் ஆகியவை பயன்படுத்தியே இது போன்ற மோசடி செயலில் ஈடுபடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குற்றச்செயல்களில் ஈடுபடுவதை உணர்ந்தாலும் அந்த கும்பல் மிரட்டி மோசடி வேலைகளில் ஈடுபட வைப்பதாகவும், அங்கிருந்து செய்யக்கூடிய மோசடி வேலைகளால் தமிழ்நாடு மக்கள் தான் பாதிப்படைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாகக் கூறி, மோசடியில் ஈடுபடும் இது போன்ற மோசடி கும்பலிடம் உஷாராக இருக்க வேண்டுமெனவும், முகவர்கள் சுற்றுலா விசா மூலமாக அழைத்துச் சென்றால் அது போலி நிறுவனம் என்றும்; வேலை விசாவில் அழைத்து செல்வதை உறுதிப்படுத்திவிட்டு செல்ல வேண்டும் எனவும் வீடியோவில் அறிவுரை வழங்கி உள்ளார்.
இதுபோன்ற முகவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டால் தமிழ்நாடு காவல்துறையில் உள்ள வெளிநாடு வாழ் இந்தியர்கள் பிரிவு (NRI cell) nricelltn.dgpgtagovin என்ற மின்னஞ்சல் மூலமாகவோ, 044-28447701 என்ற தொலைபேசி எண்ணிலோ உடனடியாக தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். உங்களுக்கு சரியான வழிகாட்டுதலை தமிழ்நாடு காவல்துறை வழங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: செய்தியாளர்களை ‘கெட் அவுட்’ என கூறிய ஹெச்.ராஜா - செய்தியாளர் சந்திப்பில் சலசலப்பு