சூடான் நாட்டின் தலைநகரான கர்த்தூமில் உள்ள செராமிக் ஆலையில் கடந்த 3ஆம் தேதி திடீரென சிலிண்டர் வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் சிக்கி 18 இந்தியர்கள் உட்பட 23 பேர் உயிரிழந்தனர். 130 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
உயிரிழந்த 18 இந்தியர்களில், மூன்று பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் எனத்தகவல் வெளியானது. உயிரிழந்தவர்களின் உடல்கள் அடையாளம் தெரியாத அளவிற்கு கருகி இருந்தததால் அவர்கள் யார் எனக் கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டதாக இந்தியத் தூதரகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சூடான் தீவிபத்தில் படுகாயமடைந்து அங்கேயே சிகிச்சை பெற்றுவந்த கடலூரைச் சேர்ந்த முகமது சலீம், திருவாரூரைச் சேர்ந்த பூபாலன் ஆகியோர் இன்று சூடானிலிருந்து துபாய் வழியாக சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். சென்னை விமான நிலையத்திற்கு வந்த சலீம் மற்றும் பூபாலன் ஆகியோரை தமிழக அரசின் அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர், சலீம் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பூபாலனை சொந்த ஊரான திருவாரூருக்கு வாகன வசதி ஏற்படுத்தி அதிகாரிகள் அனுப்பிவைத்தனர்.
இதையும் படிங்க: சூடான் தீ விபத்து - 18 இந்தியர்கள் உயிரிழப்பு!