சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில் அதிமுக, திமுக, தினகரனின் அமமுக, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகியவை தனித்தனி அணிகளாக களம் காணுகின்றனர். இந்த அணிகள் களத்தில் என்ன மாதிரியான பலத்துடன் களமிறங்குகின்றன, என்ன திட்டம் வைத்திருக்கின்றன என்பவனவற்றை இதில் காணலாம்.
அதிமுக தலைமையிலான கூட்டணி:
ஆளும் கட்சியான அதிமுக மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்கும் முனைப்புடன் தேர்தல் களத்தில் நிற்கிறது. முதலில் பின்தங்கி இருந்த அதிமுக, தற்போது களத்தில் திமுகவிற்கு இணையாக வெற்றி பெறும் பலத்துடன் முன்னேறி உள்ளது. தேர்தல் தேதி அறிவிப்பிற்கு முன்னதாகவே பல்வேறு கவர்ச்சிகரத் திட்டங்களை அதிமுக அரசு அறிவித்திருந்தது.
இறுதி சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலும் பல்வேறு விதமான அறிவிப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். குறிப்பாக மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு அறிவிப்பு என்பது தேர்தலில் பெரும்விளைவை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாக பார்க்கப்படுகிறது.
கிராமப்புற விவசாயிகளின் வாக்குகளைப் பெறும் வகையில், பல்வேறு விதமான கவர்ச்சிகரத் தள்ளுபடி அறிவிப்புகளையும் அதிமுக அரசு அறிவித்துள்ளது. இதேபோல் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.1500 வழங்குவது, இலவச சலவை இயந்திரம், ஆண்டிற்கு 6 எரிவாயு சிலிண்டர் இலவசம், மகளிர் சுய உதவிக்குழுக்களின் கடன்கள் தள்ளுபடி, பெண்களுக்கு பேருந்துக் கட்டணத்தில் சலுகை போன்ற அறிவிப்புகள் பெண்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவல்லது.
மேலும், பிப்ரவரி 13ஆம் தேதி விவசாயிகளைக் கவரும் வகையில் ரூ.12,110 கோடி மதிப்புள்ள பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பை பழனிசாமி வெளியிட்டார். இதனால் பதினாறு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைந்துள்ளதாகத் தெரிகிறது.
அதைத் தொடர்ந்து விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற ஆறு சவரன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டார். காவிரி பாசன விவசாயிகள் பயன்பெறும் வகையில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
பொதுவாக அதிமுக அரசு எம்ஜிஆர் காலத்தில் இருந்தே கிராமப்புறப் பகுதி வாக்காளர்களையும், பெண் வாக்காளர்களையும் கவரும் வகையில் அறிவிப்புகளை வெளியிட்டு வந்திருக்கிறது என்பது தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் என்பதை மறுப்பதற்கில்லை.
மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 9,10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து அறிவிப்புடன், கல்லூரி மாணவர்களுக்கு ஆண்டு முழுவதும் 2ஜிபி டேட்டா இலவசம் ஆகியவையும் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
ஈபிஎஸ், அதிமுக ஆட்சியில் 13 புதிய மருத்துவக் கல்லூரிகள் தமிழ்நாடு முழுவதும் கொண்டு வரப்பட்டது. நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு வழங்கியதன் மூலம் 400 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடம் கிடைத்துள்ளது.
பொதுவாக ஆளும்கட்சி தேர்தல் அறிக்கை வெளியிடும்போது பொதுமக்களுக்குப் பலத்த எதிர்ப்பார்ப்பு நிலவும். பல்வேறு விதமான தள்ளுபடி அறிவிப்புகள், இலவசத் திட்டங்கள் வெளியிடுவது என்பது வழக்கம். இதுபோன்ற அறிவிப்புகள் மூலம் அரசுக்கு எதிரான மனநிலையினை மாற்றுவதற்கான தொடர் முயற்சியினை அதிமுக அரசு எடுத்துள்ளதாகவும், முத்தாய்ப்பாக வன்னியர் வாக்கு வங்கியை குறிவைத்து கடைசி நேரத்தில் சட்ட மசோதாவினை பேரவையில் தாக்கல் செய்து ஆளுநர் ஒப்புதலைப் பெற்றது.
குறிப்பாக திமுக குடும்பக்கட்சி என்றும், வாரிசு அரசியலை மையப்படுத்தி தொடர் பரப்புரையை முன்னெடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
திமுக தலைமையிலான அணியின் பலம்:
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தோழமைக் கட்சிகளுடன் திமுக இந்த முறையும் களம் காண்கிறது. அதிமுக அணியில் பாஜக கூட்டணி அமைந்துள்ளதால், பாஜக எதிர்ப்பு வாக்குகளை அறுவடை செய்யும். அதே உத்வேகத்துடன் திமுக தலைமையிலான கூட்டணி செயல்பட்டு வருகிறது.
கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சி தொடர்வதால், ஆளும்கட்சி மீதான எதிர்ப்பு அலையும், அயர்ச்சியும் நீடிக்கிறது. கடந்த முறை 1.1% வித்தியாசத்தில் மட்டுமே திமுக ஆட்சியை இழந்தது. இதனால் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் என பல்வேறு விதமான கருத்துக்கணிப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. அதே சமயம் களத்தில் கடுமையான போட்டி இருக்கும் என்பதால், கடந்த ஆண்டு நவம்பர் மாதமே தேர்தல் பரப்புரையை ஆரம்பித்துவிட்டனர்.
தென் மாவட்டங்களில் கனிமொழியும், கொங்கு மண்டலத்தில் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் மக்களை சந்தித்து ஆதரவு திரட்டினர். திமுகவின் தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கான உரிமைத் தொகை என மாதம் ரூ.1000 வழங்குவது, கரோனா நிவாரணமாக அரிசி அட்டை வைத்திருக்கும் குடும்பங்களுக்கு ரூ.4,000 வழங்குவது போன்ற வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.
நீட் தேர்விற்கு எதிரான மக்களின் மனநிலை, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் போன்றவை திமுகவிற்கு சாதகமாக அமையலாம். இளைஞர்களின் வாக்குகளை கவர்வதற்காக உதயநிதி ஸ்டாலின் சூறாவளி பரப்புரை செய்து வருகிறார். எய்ம்ஸ் மருத்துவமனையை செங்கல்லாக சித்தரித்து அவர் மேற்கொண்டு வரும் பரப்புரைகள் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதே போல் ஈபிஎஸ்- சசிகலா போன்ற உட்கட்சி பிரச்சினைகளும் திமுகவிற்கு சாதகமாகவே அமையலாம் என எதிர்பார்க்கின்றனர்.
மூன்றாவது அணிகளின் பலம்:
தமிழ்நாடு அரசியலைப் பொறுத்தவரை மூன்றாவது அணி என்பது இதுவரை வாக்குகளைப் பிரிக்கும் வேலையை மட்டுமே செய்துள்ளது. 1996இல் வைகோ தலைமையில் மக்கள் ஜனநாயக முண்ணனி என்ற பெயரிலும், 2006ஆம் ஆண்டு விஜயகாந்த் தலைமையிலும், 2016ஆம் ஆண்டு மக்கள் நலக் கூட்டணி என்ற பெயரிலும் பல கட்சிகள் இணைந்து தேர்தலைச் சந்தித்தன. ஆனால், இதுவரை தேர்தலில் எதிர்பார்த்த வெற்றியையோ பெரிய தாக்கத்தையோ இதுபோன்ற மூன்றாவது அணிகள் ஏற்படுத்தவில்லை.
இந்த முறை கமல் ஹாசன் தலைமையில் மூன்றாவது அணியாக சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி ஆகியவற்றை உள்ளடக்கிய அணி உருவாகியுள்ளது. படித்த முதல் தலைமுறை வாக்காளர்கள், நகர்ப்புற வாக்காளர்களின் போதிய ஆதரவுடன் வெற்றியை இந்த அணியினர் திரட்டுவார்களா என்ற சந்தேகம் உள்ளது. மாற்றத்தை விரும்பும் வாக்காளர்களின் அடுத்த தேர்வாக மூன்றாம் அணியைப் பார்ப்பது, இவர்களின் பலமாகப் பார்க்கப்படுகிறது.
முதல்கட்ட பரப்புரையைத் தமிழ்நாடு முழுக்க முடித்துவிட்ட கமலும், தற்போது கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில் தற்போது முகாமிட்டிருக்கிறார். தொடர் மக்கள் சந்திப்பு அவரது பலமாக பார்க்கப்படுகிறது.
நாம் தமிழர் சீமான், அமமுகவின் டிடிவி தினகரன் ஆகியோரும் தமிழ்நாடு முழுவதும் மக்களைச் சந்தித்து பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆ.ராசா, தயாநிதி மாறன் ஆகியோரின் ரசிக்கத் தகாத பேச்சுகள் இத்தேர்தலில் என்ன விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கவேண்டும். தமிழ்நாடு வாக்காளர்களின் எண்ண ஓட்டத்தை கணிப்பது என்பது அவ்வளவு எளிதல்ல, யார் வெற்றி வாகை சூடுகிறார்கள் என்பது மே 2ஆம் தேதி தெரிந்துவிடும்.