சென்னை: தனி மனித செல்வாக்கு, தான் சார்ந்த சமூக பலம், தொகுதியில் கடந்த தேர்தல்களில் கைப்பற்றிய வாக்குகள் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டே ஸ்டார் வேட்பாளர்கள் தாங்கள் போட்டியிடும் தொகுதியைத் தேர்வுசெய்கின்றனர் என்றாலும், அதைத் தாண்டியும் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.
அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா தேனி போடிநாயக்கனூர் தொடங்கி சென்னை ஆர்.கே. நகர் வரை அப்போதைய தேர்தல் கள நிலவரத்தை ஆராய்ந்து தனது தொகுதியைத் தேர்வுசெய்துள்ளார். இதேபோல் திமுக தலைவராக இருந்த கருணாநிதி குளித்தலை, சென்னை துறைமுகம், சைதாப்பேட்டை, அண்ணாநகர், சேப்பாக்கம், திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு தொகுதிகளில் போட்டியிட்டுள்ளார்.
இன்றைய ஸ்டார் வேட்பாளர்கள்
இந்நிலையில் வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், பாஜக சார்பில் நடிகை குஷ்பு உள்ளிட்ட ஸ்டார் வேட்பாளர்கள் வெற்றி வாய்ப்பின் அடிப்படையில் தாங்கள் போட்டியிடும் தொகுதியைத் தேர்வுசெய்துள்ளனர்.
கொங்கு மண்டலத்தைக் குறிவைக்கும் கமல்
கமல் ஹாசன் தான் முதல் முறையாகப் போட்டியிடும் சட்டப்பேரவைத் தேர்தலில் கோவை தெற்குத் தொகுதியைத் தேர்வுசெய்துள்ளார். கமல் ஹாசன் சென்னையில் ஏதேனும் ஒரு தொகுதியைத் தேர்வுசெய்வார் என்று எதிர்பார்த்த நிலையில் இத்தொகுதியைத் தேர்ந்தெடுத்ததன் காரணம், கடந்த மக்களவைத் தேர்தலில் கோவை தொகுதியில் மக்கள் நீதி மய்யம் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்றதுதான். நகர்ப்புறவாசிகள் தனக்கு ஆதரவாக இருப்பார்கள் என்றும் கமல் ஹாசன் இத்தொகுதியைத் தேர்வுசெய்துள்ளார்.
ஆர்.கே நகர் டூ கோவில்பட்டி
2017ஆம் ஆண்டு நடைபெற்ற ஆர்.கே. நகர் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற டிடிவி தினகரன் தற்போது சுமார் 600 கி.மீ. தொலைவில் உள்ள கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடுகிறார்.
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியின்கீழ் கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதி வருகிறது. 2019 நாடாளுமன்றத் தேர்தலில், அமமுக தூத்துக்குடி தொகுதியில் எட்டு விழுக்காடு வாக்குகளைப் பெற்றது.
அதன்பிறகு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலிலும் கோவில்பட்டியில் உள்ள கயத்தாறு பஞ்சாயத்து யூனியனில் 13 கவுன்சிலர்களைப் பெற்று அதிமுக - திமுகவிற்கு அதிர்ச்சி கொடுத்தது அமமுக.
இதற்கு கோவில்பட்டியில் மிகுந்த செல்வாக்குடன் இருக்கும் மாணிக்கராஜா முக்கியமான காரணமாகச் சொல்லப்படுகிறது. இதன் அடிப்படையிலும், தான் சார்ந்த சமூகத்தின் வாக்குகளை நம்பியும் கோவில்பட்டியில் களம் இறங்கியுள்ளார் டிடிவி தினகரன்.
கோட்டையைத் தக்கவைப்பாரா உதயநிதி
உதயநிதி ஸ்டாலின் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட உள்ளார் போன்ற செய்திகள் வெளியாகத் தொடங்கிய தருணம் முதல், அவர் கருணாநிதியின் சொந்தத் தொகுதியான திருவாரூரில் போட்டியிடுவாரா அல்லது திமுக கோட்டையாகக் கருதப்படும் சென்னை ஆயிரம் விளக்கு அல்லது சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
அந்த எதிர்பார்ப்பை உறுதிசெய்யும் வகையில் உதயநிதி ஸ்டாலின் மூன்று முறை கருணாநிதி வெற்றிபெற்ற சேப்பாக்கம் தொகுதியையே தேர்வுசெய்துள்ளார். திமுகவிற்கு மிகவும் சாதகமான தொகுதி என்பதாலும் சிறுபான்மையின மக்கள் அதிகம் வசிக்கும் பகுதி என்பதாலும் சேப்பாக்கம் தொகுதி உதயநிதிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
திருவொற்றியூரில் களமிறங்கிய சீமான்
சீமான் கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிடுவேன் என்று தெரிவித்த நிலையில், சென்னை திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்தார்.
திருவொற்றியூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சிக்கு நல்ல ஆதரவு இருப்பதாகவும், மீனவர்கள், இளைஞர்கள் ஆதரவு தனக்கு இருப்பதாகவும் நம்பி திருவொற்றியூர் தொகுதியில் களம் காண உள்ளார் சீமான்.
விஜயகாந்தின் களத்தில் பிரேமலதா
2006ஆம் ஆண்டில் தேமுதிக தொடங்கப்பட்டு வெறும் 6 மாத காலத்தில் விஜயகாந்த் வெற்றிபெற்ற விருத்தாசலம் தொகுதியில் தற்போது பிரேமலதா விஜயகாந்த் களம் காண உள்ளார்.
தனது கணவன் கூட்டணியின்றி தனியாக நின்று வென்ற தொகுதி என்ற அடிப்படையிலும், தான் சார்ந்த சமூக வாக்குகளை நம்பியும் உச்சபட்ச ரிஸ்கை எடுத்துள்ளார் பிரேமலதா.
ஆயிரம் விளக்கில் குஷ்பு
இவர்களோடு, பாஜகவின் ஆயிரம் விளக்கு வேட்பாளர் குஷ்புவை பொறுத்தவரை தான் எதிர்பார்த்த சேப்பாக்கம் தொகுதி கூட்டணி கட்சிக்குச் சென்றதால் பிரபலம் என்ற பிம்பத்தை நம்பியும், மேல்தட்டு மக்களின் வாக்குகளை நம்பியும் இத்தொகுதியில் போட்டியிடுகிறார்.
இதைப் பற்றி நம்மிடம் பேசிய ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியரும் அரசியல் நோக்கருமான திருநாவுக்கரசு, "ஸ்டார் வேட்பாளர்கள் தங்கள் தனிப்பட்ட சமூகம், கடந்த தேர்தல் அனுபவங்களை வைத்து தேர்வுசெய்வார்கள்.
இது ஏதும் இல்லாமல் வெறும் நகர்ப்புற வாக்குகளை நம்பி போட்டியிடும் வேட்பாளர் நடிகை குஷ்பு என்றும் கூறலாம். குஷ்பு என்பவரால் சென்னை தவிர்த்து ஏதோ ஒரு கிராமத்திற்குச் சென்று போட்டியிட முடியாது.
இதேபோல் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் கோவையில் இருக்கும் மலையாளிகளின் வாக்குகள் தனக்குச் சாதகமாக இருக்கும் என்று அங்கு போட்டியிடுகிறார்.
மேலும் டிடிவி தினகரன் பல்வேறு கணக்குகள் போட்டுதான் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடுகிறார். தான் சார்ந்த சமூகம், சொந்தங்கள் போன்றவை தனக்கு உதவும் என டிடிவி நம்புகிறார்.
பிரேமலதா விஜயகாந்த் பொறுத்தவரை திமுக - அதிமுக கட்சிகளுக்கு இடையே பெரிய அலையுடன் பெரிய அளவு பரப்புரை செய்யாமல் 2006இல் விஜயகாந்த் விருத்தாசலம் தொகுதியில் வெற்றிபெற்றுள்ளார். இதை முழுவதும் நம்பி தற்போது பிரேமலதா விஜயகாந்த் களம் காணுகிறார்.
ஒவ்வொரு ஸ்டார் வேட்பாளரும் பலகட்ட ஆலோசனைக்குப் பிறகுதான் எப்போதும் ஒரு பாதுகாப்பான இடத்தைத் தேர்வுசெய்வார்கள். தோற்றாலும் கணிசமான வாக்குகளைப் பெறுவதற்குப் பார்ப்பார்கள்" எனத் தெரிவித்தார்.
காமராசர், அண்ணாதுரை, ஜெயலலிதா, விஜயகாந்த், ஸ்டாலின், சிவாஜி கணேசன் போன்ற ஸ்டார் வேட்பாளர்கள் தேர்தல் அரசியலில் தோற்ற வரலாறும் உள்ளது. எனவே எவ்வளவு பெரிய ஸ்டார், என்ன கணக்குகள் போட்டாலும் இறுதிக் கணக்கு மக்கள் கையில்தான் என்பதே நிதர்சனமான உண்மை.
இதையும் படிங்க: சசிகலா ஆதரவை கேட்கலாமா? ஈபிஎஸ்-ஓபிஎஸ் ஆலோசனை