சென்னை: அதிமுக முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் சென்னை அடையாரில் உள்ள முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையை பார்வையிட்டார்.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "இந்த சோதனையானது அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக நடத்தப்படுகிறது. இது ஒரு பழி வாங்கும் நடவடிக்கை. ஏற்கெனவே இரண்டு முறை சோதனை நடத்தினார்கள். ஆனால் எந்த ஆவணமும் கைப்பற்ற முடியாத நிலையில், இன்று மீண்டும் புதிதாக வழக்குகளை இவர்கள் மீது போட்டு சோதனை என்ற பெயரில் இந்த அரசு எதிர்க்கட்சிகளை அடக்கி ஒடுக்கி ஒழிக்கலாம் என்றும் நினைக்கிறது.
ஆளத்தெரியாத முதலமைச்சராக செயல்பட்டுக்கொண்டிருக்கிற மு.க.ஸ்டாலின், அவரது தந்தை எப்படி பழிவாங்கும் போக்கை தொடர்ந்தாரோ, அதைவிட ஒரு படி மேலாக சென்று இவர் நடந்து கொள்கிறார். இன்றைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர்களை வழக்குகள் போட்டு அடக்கிவிடலாம் என்று இந்த அரசு தவறான கணக்கை போட்டுக்கொண்டிருக்கிறது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் மு.க.ஸ்டாலின் தேர்தல் நேரத்தில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்குத் திறன் இல்லாத திறமை இல்லாத ஸ்டாலின் அரசு, மக்களை திசை திருப்புவதற்காகவே இது போன்ற சோதனைகளை நடத்துகிறது. திமுக ஆட்சி பொறுப்பேற்று 15 மாதங்களிலேயே அனைத்து விலைவாசியும் உயர்ந்திருக்கிறது.
105 விழுக்காடு சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. கரோனா காலத்தில் பாதிக்கப்படாமல் இருக்க மக்களுக்கு பல்வேறு சலுகைகள் அளித்து எடப்பாடி பழனிசாமி அரசு ஆட்சி நடத்தினார்கள். ஆனால், கரோனாவில் இருந்து மீண்டு வந்து கொண்டிருக்கும் மக்களுக்கு எதிராக மீண்டும் இந்த அரசு மக்கள் விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
பால் விலை, கட்டுமானப்பொருள், சொத்துவரி, மின் கட்டணம் ஆகியவை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. அடுத்து பஸ் கட்டண உயர்வு அமலுக்கு கொண்டு வரப்படும். இது மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியாக முதலமைச்சர் தர இருக்கிறார். அரசாங்கம் அமைத்துள்ள அனைத்து அமைப்புகளையும் தனியாருக்கு தாரைவார்த்துக்கொடுக்கின்ற வகையில் முதலமைச்சர் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்.
அவருடைய குடும்பத்தை சேர்ந்த நிறுவனங்கள் இன்றைக்கு கொள்ளை அடித்து பட்டா போட்டுக்கொண்டிருக்கிறது. இன்றைக்கு விஞ்ஞானரீதியாக கொள்ளையடிக்க உலகத்திலேயே திமுகவை வெல்ல ஆளே இல்லை. முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் மீது வழக்குப்போட வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது.
ஒரு மருத்துவ கல்லூரிக்கு அங்கீகாரம் கொடுத்தது முறையாக கொடுக்கவில்லை என்கிறார்கள். மருத்துவக் கல்லூரிக்கு அங்கீகாரம் கொடுப்பது மாநில அரசாங்கம் இல்லை. வெறும் தடையில்லா சான்று மட்டும் தான் மாநில அரசாங்கம் கொடுக்கமுடியும். மெடிக்கல் கவுன்சில் ஆஃப் இந்தியா தான் ஆய்வு செய்து முறையான அனுமதி கொடுக்கும். மெடிக்கல் கவுன்சில் ஆஃப் இந்தியா அனுமதி தந்தது என்பதால் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை இந்த வழக்கில் சேர்த்து உள்ளார்களா?.
தடையில்லா சான்று வழங்கியதற்காக, உங்களுடைய அமைச்சர் மீது நடவடிக்கை எடுப்பீர்களா?, உங்கள் அமைச்சர்களுக்கு எந்த நடைமுறையில் சான்று கொடுக்கப்பட்டிருக்கிறதோ அதே நடைமுறையில் தான் இவர்களுக்கும் சான்று அளிக்கப்பட்டிருக்கிறது.
இந்த அரசு தேவையில்லாத காழ்ப்புணர்ச்சியில் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். மக்களுக்கு திமுக ஆட்சி மீது ஏற்பட்டிருக்கிற கோபத்தை திசை திருப்புவதற்காகத்தான் இது போன்ற செயலில் ஈடுபட்டு வருகிறார்கள்" என கூறினார்.
இதையும் படிங்க: எஸ்.பி.வேலுமணி,சி.விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை