சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த பேராயர் காட்ப்ரே நோபுள், பெண் மத போதகர் மானுவேல் மரியா செல்வம் என்பவர் பாதிரியார்களின் மகன்களை குறிவைத்து வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி லட்சக் கணக்கில் பண மோசடியில் ஈடுபட்டதாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.
இந்த புகார் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் பெண் மத போதகரான மானுவேல் மரியா செல்வத்திடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இலங்கையைச் சேர்ந்த பெண் என்பதால் அவரது குடியுரிமை ஆவணங்களை போலீசார் சோதனை மேற்கொண்டபோது, அவரிடம் இந்திய முகவரியுடன் இந்திய பாஸ்போர்ட் இருப்பது தெரியவந்தது.
பின்னர் அதுகுறித்து குடியுரிமை அலுவலகத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, மானுவேல் மரியா செல்வம் கடந்த ஆறு ஆண்டுகளாக போலி பாஸ்போர்ட் வைத்து இந்தியாவில் தங்கி இருந்தது தெரியவந்தது. மேலும் இலங்கை குடியுரிமை பெற்ற மரியசெல்வம் கடந்த 2016ஆம் ஆண்டு இலங்கை பாஸ்போர்ட் மூலம் இந்தியா வந்திருப்பதும், பின்னர் தமிழகம் வந்து கடந்த சில ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் இருந்து பாஸ்போர்ட் பெற்றது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து இந்திய குடியுரிமைக்கான போலி ஆவணங்களை சமர்பித்து பாஸ்போர்ட் பெற்றுள்ளது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து குடியுரிமை அலுவலர் நிபின் ஜோசஃப் அளித்த புகாரின் அடிப்படையில் மோசடி, பொய்யான ஆவணங்களை புனைதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் அண்ணா நகரை சேர்ந்த மரிய செல்வத்தை இன்று (ஆக.23) கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் அவர் பேசிய ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இதையும் படிங்க: குரோம்பேட்டை அரசு போக்குவரத்து பயிற்சி மையத்தில் ஏழாம் கட்ட ஊதிய ஒப்பந்தப்பேச்சுவார்த்தை...