சென்னை: நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்ற தமிழ்நாடு சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. கடந்தாண்டு செப்டம்பர் 13ஆம் தேதி நீட் தேர்வில் விலக்கு கோரி மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.
142 நாள்களுக்கு பின் மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி பிப்ரவரி ஒன்றாம் தேதி திருப்பி அனுப்பினார். மேலும், சட்டமுன்வடிவை மறுபரிசீலனை செய்யும்படியும் ஆளுநர் தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து பிப்ரவரி ஐந்தாம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்று சட்டமன்ற சிறப்பு கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது
மசோதாவை திருப்பி அனுப்பியது தொடர்பான ஆளுநரின் கடிதத்தை சட்டப்பேரவையில் சபாநாயகர் வாசித்தார். அப்போது, நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பியதற்கு ஆளுநர் கூறிய காரணங்கள் ஏற்புடையதாக இல்லை என்றும், நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது என்றும் வசதி படைத்தவர்களுக்கு சாதகமானது என்றும் நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளதாகவும் கூறினார்.
முக்கிய பாடங்களில் மாணவர் திறனை சோதிப்பதை தவிர்த்து அனைத்து வகை அறிவு என்ற பெயரில் வினோதமான சோதனை முறையை நீட் அறிமுகம் செய்துள்ளதாகவும் அவர் கூறினார். நீட் தேர்வு மாணவர்களுக்கு உரிய தகுதிக்கு அங்கீகாரம் இல்லை என குறிப்பிட்ட அவர், உயர்மட்ட குழுவின் அறிக்கையை ஆளுநர் ஒருதலைபட்சமாக அணுகியுள்ளதாகவும், நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க தாமதமானதால் அதுகுறித்து பொதுவெளியில் விவாதிக்க அரசியல் கட்சிகளுக்கு உரிமை உள்ளது என்றும் கூறினார்.
இயன்ற அளவில் விரைவில் முடிவு எடுக்க வேண்டும் என்று அரசியல் அமைப்பு சட்டத்தில் உள்ளது. ஆனால் 142 நாள்கள் கழித்து மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார். இயன்ற அளவில் விரைவில் என்பதன் பொருள் இதுதானா? இது சரிதானா என்றும் சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பினார்.
கடமையில் இருந்து விலக மாட்டேன்
அதேபோல், சபாநாயகருக்கு அனுப்பிய கடிதத்தை பொதுவெளியில் வெளியிட்டது உகந்ததா என்பதை சம்பந்தப்படாதவர்கள் உணர வேண்டும் என குறிப்பிட்ட அவர், எனது பணி, கடமையில் இருந்து கடுகு அளவும் விலக மாட்டேன் என்றும் சபாநாயகர், கட்சி சார்பற்று செயல்பட வேண்டும் என்பதை தான் அறிவதாகவும், என் தலைவர் கருணாநிதி, ஸ்டாலின் சொல்லிக்கொடுத்த பாடம் நினைவில் இருக்கிறது என்றும் தெரிவித்தார்.
ஆளுநரை சட்டப்பேரவையில் விமர்சிக்கக்கூடாது என்று கருணாநிதி இருந்தபோது பேரவை விதிகளில் திருத்தம் செய்யப்பட்டதாக குறிப்பிட்ட அவர், அதனை அனைவரும் முழுமையாக பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: நீட் விலக்கு புதிய மசோதா: இன்று சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம்