சென்னை: தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில தலைவர் ஆறுமுகம், மாணவர்கள் மாற்று சான்றிதழ் இல்லாமல் அரசுப் பள்ளிகளில் சேருவது குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார்.
அதில், "தமிழ்நாட்டில் இயங்கிவரும் தனியார் சுயநிதி பள்ளிகளை அரசு கண்டு கொள்வதே இல்லை. மாறாக நசுக்க பார்க்கிறது. கடந்த 16 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் பள்ளி நிர்வாகிகளும், ஆசிரியர்களும் மிகுந்த நிதி நெருக்கடியிலும், மன உலைச்சலிலும் உள்ளனர்.
இந்த சூழலில், தமிழ்நாடு முழுவதுமுள்ள தனியார் சுயநிதி பள்ளிகளில் கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் புதியதாக மாணவர்கள் சேர்க்கை எதுவுமே இல்லை. இந்த சூழலில், மாற்றுச் சான்றிதழ் இல்லாமல் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை செய்வதை தடுக்க வேண்டும்.
தொடக்க அனுமதி கேட்டு மார்ச் 2020க்கு முன்னர் கருத்துரு கொடுத்திருந்த, கொடுத்து விளக்கம் கேட்டு திருப்பப்பட்ட பள்ளிகளின் மேல் எவ்வித நடவடிக்கையும் எடுக்க கூடாது. மார்ச் 2020 முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், அந்த தேதியிலிருந்து புதுப்பித்தலுக்கான காலக்கெடு முடிந்த பள்ளிகளுக்கு மே 2023 வரை நீட்டிப்பு அரசே செய்து அரசு ஆணை வெளியிட வேண்டும்.
கரோனா ஊரடங்கு ஆரம்பித்த மார்ச் 2020 லிருந்து மே 2022க்கு இடைப்பட்ட காலத்தில் முடியும். பள்ளி கட்டட உறுதிச்சான்றிதழ், கட்டட உரிமம், தீயணைப்புத் துறை சான்று உள்ளிட்ட சான்றிதழ்களை மே 2023 வரை காலநீட்டிப்பு செய்து உத்தரவிட அந்தந்த துறைகளுக்கு அரசு ஆணையிட வேண்டும்.
2020-21க்கான குழந்தைகளுக்கான கட்டாயக் கல்விக் கட்டணத்தை உடனடியாக விடுவிக்க வேண்டும். மேலும் 2021-22 கல்வி ஆண்டிற்கான இலவச சேர்க்கையை உடனடியாக தொடங்க அறிவிப்பு வெளியிடவேண்டும்.
பள்ளிகளில் நேரடியாக வகுப்புகள் ஆரம்பிக்கும்வரை தனியார் சுயநிதி பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும் மாத உதவித்தொகை ரூபாய் 2,500 வழங்க வேண்டும். பள்ளிகளில் நேரடி வகுப்புகள் ஆரம்பிக்கும் வரை நடத்தப்படும் ஆன்லைன் வகுப்பு கட்டாயம் என அறிவித்து, அதன் அடிப்படையில் அந்தந்த பள்ளி நிர்வாகமே தேர்ச்சி வழங்க வேண்டும்.
அரசே தன்னிச்சையாக அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கக் கூடாது. இனிவரும் காலங்களில் புதுப்பித்தல் சான்றிதழ்களை 5 வருடங்களுக்கு வழங்க வேண்டும். ஏற்கனவே அங்கீகாரம் பெற்று இயங்கி வரும் பள்ளி கட்டடங்களுக்கு DTCP வாங்க கட்டாயபடுத்தக் கூடாது.
இவைகள் உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி 2020ஆம் ஆண்டில் பொறுப்பில் இருந்த அரசிடம் பத்திற்கும் மேற்பட்ட முறை முறையீடு செய்தும் எந்த நடவடிக்கை இல்லை. அதனால் பிப்ரவரி மாத இறுதியில் சென்னையில் தர்ணா நடத்த திட்டமிட்டு கரோனா தொற்று பரவலை கருத்திற்கொண்டு அந்த போராட்டத்தை கைவிட்டோம்.
புதிதாக அமைந்த இந்த அரசிடமும் பலமுறை கோரிக்கை கடிதம் அனுப்பியும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி தனியார் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள், மறைமுக பயனாளர்கள் ஆகியோரின் வாழ்வாதாரத்தை காக்கக் கோரி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தர்ணா போராட்டம், அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களின் முன் நடத்தப்படும்" என கூறியுள்ளார்.