சென்னை: ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவர்களாகப் பணியாற்றிவருபவர்கள் வெற்றி செல்வன், மோகன்ராஜ். இவர்கள் கரோனா பிரிவில் பணியாற்றிவந்ததால், பாதுகாப்பு காரணமாக தி. நகரில் உள்ள விடுதி ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டுத் தங்கவைக்கப்பட்டனர்.
இந்நிலையில், அதே மருத்துவமனையில் பணியாற்றிய இரு பெண் மருத்துவர்களும் அதே விடுதியில் தங்கியுள்ளனர். இதனையடுத்து, விடுதியில் தங்கியிருந்தபோது மருத்துவர் வெற்றி செல்வன் பெண் மருத்துவர் ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். அதேபோல் மற்றொரு மருத்துவர் மோகன்ராஜ் வேறொரு பெண் மருத்துவரிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டுள்ளார்.
இது குறித்து இரு பெண் மருத்துவர்களும் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையின் தலைவர் தேரணிராஜனிடம் முறையிட்டுள்ளனர். இதனையடுத்து தேரணிராஜன் தி. நகர் துணை ஆணையர் ஹரிகிரன் பிரசாத்திடம் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
இதனையடுத்து அரசு மருத்துவர் வெற்றி செல்வன் மீது பாலியல் வன்புணர்வு வழக்கும், மருத்துவர் மோகன்ராஜ் மீது பாலியல் தொல்லை வழக்கும் பதிவுசெய்யப்பட்டது. மேலும், இருவரையும் கைதுசெய்த காவல் துறையினர், நீதிமன்றத்தில் முன்னிறுத்திச் சிறையில் அடைத்தனர்.
இதனைத் தொடர்ந்து இரண்டு மருத்துவர்களையும், மருத்துவக் இயக்குநரகம் பணிநீக்கம் செய்துள்ளது. இந்நிலையில் இரண்டு பெண் மருத்துவர்கள் பாலியல் தொல்லைக்கு ஆளான இச்சம்பவம் சக மருத்துவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:கனமழை: எந்தெந்த மாவட்டங்களில் விடுமுறை