உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 20ஆம் தேதி முதல் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன், நேற்று (ஆக. 5) மாலை காலமானார். அவரது மறைவுக்குப் பல்வேறு கட்சித் தலைவர்களும் இரங்கல் செலுத்திவருகின்றனர்.
இதனிடையே அவரது உடல் இன்று அடக்கம் செய்யப்பட உள்ளது. அதன் காரணமாக அவரது உடல் சென்னை, தண்டையார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது.
அவரது உடலுக்கு அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து, அங்கு வந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மதுசூதனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு ஓபிஎஸ்-இபிஎஸ் ஆகியோருக்கும், குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து, சசிகலா மதுசூதனின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது, ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, அதிமுக நிர்வாகிகள் அவ்விடத்தில் இல்லை. இதனிடையே, சசிகலா வந்திருந்தபோது அவரது ஆதரவாளர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையும் படிங்க: மதுசூதனன் உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி