சென்னை: அரசு ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை தமிழ்நாடு அரசே ஏற்று நடத்த வேண்டும் என ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளது.
அதில், 'மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்காக (NHIS) கடந்த 2016ஆம் ஆண்டு முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஊதியத்தில் மாதந்தோறும் ரூ.180 பிடித்தம் செய்யப்பட்டுவருகிறது.
இத்திட்டத்தின்கீழ் நான்கு ஆண்டுகளுக்கு, பல்வேறு நோய்களுக்கான அறுவை சிகிச்சைகளுக்கு அதிகப்பட்சமாக ரூ. 4 லட்சமும், சில பிரத்யேக அறுவை சிகிச்சைகளுக்கு அதிகப்பட்சமாக ரூ.7.25 லட்சமும் வழங்கிட அரசாணையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஆனால், அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் மருத்துவக் காப்பீட்டுத் தொகை பல்வேறு நோய்களுக்குச் செலவாகும் தொகையை விடக் குறைவாக உள்ளது. குறிப்பாக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, புற்று நோய் போன்ற நோய்களுக்கு ஆகும் செலவில் ஒரு சிறு பகுதியே காப்பீடாக வழங்கப்படுகிறது.
எனவே, காப்பீட்டுத் தொகையை சிகிச்சைச் செலவுகளுக்கு ஈடாக உயர்த்திட வேண்டும்.
குறைவாக தரப்படும் காப்பீட்டுத்தொகை
மேலும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சை என அரசாணையில் குறிப்பிடப்பட்டாலும், காப்பீட்டு நிறுவனம் மருத்துவ சிகிச்சைகளுக்கான மொத்தச் செலவில் 20 முதல் 50 விழுக்காடு வரை மட்டுமே காப்பீட்டுத் தொகையாக வழங்குகிறது.
இதனால் அரசு ஊழியர்கள் மருத்துவச்செலவில் பெரும்பகுதியை தாங்களே கட்ட வேண்டிய நிலை ஏற்படுகிறது. இது மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் உண்மையான பயனை ஊழியர்களுக்குக் கிடைக்கவிடாமல் செய்துவிடுகிறது.
இந்த விஷயத்தில் காப்பீட்டு நிறுவனம் தமிழ்நாடு அரசையும், அரசு ஊழியர்களையும் ஏமாற்றி வருவதோடு மிகப்பெரிய அளவில் ஆதாயம் பெற்று வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் சுமார் 12 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் மாதந்தோறும் ரூபாய் 180 வீதம் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்காக ஆண்டுக்கு ரூ. 259 கோடி வரை பிடித்தம் செய்யப்படுகிறது. இதன் மூலம் கடந்த 5 ஆண்டுகளில் ரூ. 1,295 கோடி வரை பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.
ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் காப்பீட்டு நிறுவனம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கிய தொகையைக் கணக்கிட்டால் மிகவும் குறைவாகவே இருக்கும்.
காப்பீட்டுத்திட்டத்தின் உண்மை நோக்கம் நிறைவேறவேண்டும்
2016ஆம் ஆண்டில் அரசு ஊழியர்களின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கான ஒப்பந்தம், யுனைடெட் இந்தியா இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி (United India Insurance Company) என்ற மத்திய அரசு நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்டது. இத்திட்டத்தைச் செயல்படுத்தும் துணை ஒப்பந்தத்தை எம்.டி இந்தியா (MD India) என்ற தனியார் காப்பீட்டு நிறுவனத்திற்கு, யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி அளித்துள்ளது.
இந்நிறுவனம் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் உண்மையான நோக்கமாகிய 'கட்டணமில்லா சிகிச்சை' என்பதை நிறைவேற்றாமல், கொள்ளை லாபம் பார்த்துவருகிறது.
எனவே, மேற்கண்ட காப்பீட்டு நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் வருகின்ற ஜூன் 30ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
மேலும் ஒப்பந்தத்தை நீட்டிக்காமல் வருகின்ற ஜூலை 1ஆம் தேதி முதல் தமிழ்நாடு அரசே இத்திட்டத்தை ஏற்று நடைமுறைப்படுத்தி, கட்டணமில்லா சிகிச்சையின் உண்மையான நோக்கம் நிறைவேற ஆணையிட வேண்டும்.
மேலும் கரோனா நோய்த்தொற்றுக்கான சிகிச்சை, மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் கொண்டுவரப்பட்டது. ஆனால், கரோனாவின் இரண்டாவது அலையின்போது, இத்திட்டத்தின்கீழ் கரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சை வழங்க பெரும்பாலான அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகள் மறுத்துவிட்டன. இதனால் சிகிச்சை பெற்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் முழுக்கட்டணத்தையும் தாங்களே செலுத்தினர்.
இவ்வாறு அரசாணைக்குப் புறம்பாகச் செயல்பட்ட தனியார் மருத்துவமனைகள் மீது தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் சிகிச்சைக்கான கட்டணத்தைச் செலுத்திய அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் மருத்துவ சிகிச்சைக்கான முழுச் செலவையும் மருத்துவமனை ரசீதுகளின் அடிப்படையில் காப்பீட்டு நிறுவனம் வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், விடுபட்டுள்ள மேலும் சில நோய்களுக்கான சிகிச்சைகளையும் இணைத்திட வேண்டும். அதே போன்று அரசு ஊழியர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறத் தகுதியான குடும்ப உறுப்பினர்களின் பட்டியலில் தாய், தந்தையையும் இணைத்திட வேண்டும்.
தற்போதைய அரசாணைப்படி இத்திட்டத்தின்கீழ் அரசு ஊழியரின் குழந்தைகள் திருமணமாகும் வரை அல்லது அதிகபட்சமாக 25 வயது வரை மட்டுமே சிகிச்சை பெற முடியும் என்ற நிலை உள்ளது.
இதனை அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்குத் திருமணமாகும் வரை, சிகிச்சை பெற வழிவகை செய்திட வேண்டும்' என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : கடந்த ஆட்சியில் நிதிச்சுமை உயர்வு: இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத்துறை