சென்னை அரசு பல்நோக்கு மருத்துவமனை தொடங்கி இன்று எட்டாம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதையொட்டி, சிறுநீரகப் பிரிவில் புதிய டயாலிசிஸ் இயந்திரத்தை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார். தொடர்ந்து, மருத்துவமனையில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்களுக்கும் பரிசுகளை அவர் வழங்கி பாராட்டினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், ”மகாராஷ்டிராவில் கரோனா வைரஸ் தாக்கம் தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனை அனைவரும் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். பக்கத்து மாநிலமான கேரளாவில் தினமும் 4,000 முதல் 6,000 வரை கரோனா பாதிப்பு பதிவாகிறது. ஆனால், தமிழகத்தில் 100 நபர்களை சோதித்தால் அவர்களில், புள்ளி 9 என்ற நிலை இருக்கிறது.
ஆனால், முகக்கவசம், தனிமனித இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகளை பொதுமக்கள் முறையாக பின்பற்றாவிட்டால், பிற மாநிலங்களை போல் தமிழகத்திலும் வைரஸ் தொற்று பாதிப்பு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதால் வைரஸ் தொற்று தாக்குதல் தடுக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே, முன்னுரிமை உள்ளவர்கள் தற்போது தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். அடுத்ததாக இணை நோய் மற்றும் 50 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்படும்.
கரோனா வைரஸ் வழிகாட்டுதல் நெறிமுறைகள் அனைத்து பணிகளுக்கும் வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், கோயில் திருவிழாக்கள் போன்றவற்றிற்கு நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அரசியல் கட்சியினர் நடத்தும் கூட்டங்களில் தொண்டர்கள் முகக்கவசம் அணிவதில்லை. அரசியல் கட்சியினரும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்” என அறிவுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: ’வெற்றி நடைபோடும் தமிழகம்’-க்கு செலவு ரூ.64 கோடி மட்டுமே என அரசு தகவல்!