1959ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் தேதி லடாக் பகுதியில் ‘ஹாட் ஸ்பிரிங்ஸ்’ என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் நடத்திய திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்புப் படைக் காவலர்கள் 10 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, நாடு முழுவதும் பல்வேறு சம்பவங்களில் பணியின்போது வீர மரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, ஆண்டுதோறும் அக்டோபர் 21ஆம் தேதி காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது.
அதன்படி, சென்னை காமராஜர் சாலையில் உள்ள காவல் தலைமை இயக்குநர் அலுவலக வளாகத்தில் இன்று காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை நாடு முழுவதும் பணியின்போது வீர மரணமடைந்த 292 காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் பேசிய காவல் தலைமை இயக்குநர் ஜே.கே. திரிபாதி கடந்த ஆண்டில் பணியின்போது உயிரிழந்த காவலர்களின் பெயர்களை நினைவுகூர்ந்தார். பின்னர் 144 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க வீர மரணம் அடைந்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. வீர வணக்க நாளை முன்னிட்டு காவலர்கள் கறுப்புப் பட்டை அணிந்து நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: கொசு உற்பத்திக்கு காரணமான சொமெட்டோ - அதிரடி காட்டிய சுகாதாரத் துறை!