சென்னை: வியாசர்பாடி புது நகரை சேர்ந்தவர் அப்துல் ரஹீம் (21). இவர் தரமணி சட்டக்கல்லூரியில் 5ஆம் ஆண்டு படித்து வருகிறார்.
கடந்த 13ஆம் தேதி நள்ளிரவு கொடுங்கையூர் எம்.ஆர்.நகர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் இவர் சென்றபோது காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். பின்னர் முகக்கவசம் அணியாமல் சென்றதாக வழக்குபதிவு செய்து அபராத தொகையை கட்ட கூறியுள்ளனர்.
அதற்கு ரஹீம், பல சமூக விரோதிகள் நடமாடி வருகின்றனர், அவர்களை பிடிக்க துப்பு கிடையாது எனக்கூறி காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் காவலர் யுத்திரகுமார் என்பவரை கண்ணத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது.
இதனால் பணிசெய்யவிடாமல் காவல்துறையினரை தாக்கியதாக ரஹீமை கொடுங்கையூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதையடுத்து, இரவு முழுவதும் காவல் நிலையத்தில் வைத்து தன்னை நிர்வாணமாக்கி, பூட்ஸ் காலால் மார்பில் எட்டி உதைத்து காயப்படுத்தி காவலர்கள் கொடுமைப்படுத்தியதாக, கைதான சட்டக்கல்லூரி மாணவர் ரஹீம் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
மேலும் 10க்கும் மேற்பட்ட சட்ட வழக்கறிஞர்கள், மாணவர்கள் காவல் நிலையத்தில் புகுந்து, ரஹீமுக்கு நேர்ந்த கொடுமை தொடர்பாக காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சிகள் வெளியாகின.
இதுகுறித்து அவர் அளித்த புகார் மனுவில், “சம்பவத்தன்று நான் முகக்கவசம் அணிந்து வந்தேன். ஒழுங்காக அணியவில்லை என காவல்துறையினர் அபராத தொகை செலுத்த கூறினர். அதற்கு முடியாது எனக்கூறி, பார்மசியில் வேலைப்பார்க்கும் ஐடி மற்றும் சட்டக்கல்லூரி மாணவர் என கூறினேன். பின்னர் என்னை அசிங்கமாக திட்டி, வழக்குபதிவுச் செய்து காவல் நிலையத்திற்கு வலுக்கட்டாயமாக அழைத்து வந்தனர்.
அங்கு என்னை நிர்வாணமாக்கி இரவு முழுவதும் பைப், பூட்ஸ் காலால் மார்பில் எட்டி உதைத்து கொடுமைப்படுத்தினர். பீரோவில் என்னை முட்டியதில் கண்ணில் காயம் ஏற்பட்டு தையல் போடப்பட்டது. மேலும் சாப்பாடு வாங்கி கொடுத்து சாப்பிட விடாமல் தாக்கினர். காயம் ஏற்படுத்திய காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ” என தெரிவித்துள்ளார்.
தற்போது சட்டக்கல்லூரி மாணவர் காவல் நிலையத்தில் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக காவலர்கள் பூபாலன், ருத்தரன் ஆகியோர், கொடுங்கையூர் காவல் நிலையத்திலிருந்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்து காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: உதயநிதி நிகழ்ச்சியில் திமுக நிர்வாகியிடம் ரூ.1 லட்சம் திருட்டு: ஒருவர் கைது