இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " கோயம்பேடு சந்தைக்கு வந்த அதே ஊர்களில் இருந்து தான் திருமழிசைக்கும் காய்கறிகள் வருகின்றன. ஒவ்வொரு நாளும் திருமழிசை சந்தையில் பல்லாயிரக்கணக்கானோர் கூடுகின்றனர். தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்; முகக்கவசம், கையுறைகளை அணிய வேண்டும் என்று அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வந்தாலும், திருமழிசை சந்தையில் ஆரம்பத்தில் சில நாட்களைத் தவிர, அடுத்தடுத்த நாட்களில் எதுவும் கடைபிடிக்கப்படவில்லை.
மாநிலம் விட்டு மாநிலம் வரும் சரக்குந்துகள் மற்றும் ஓட்டுநர்கள், மாவட்டம் விட்டு மாவட்டம் வரும் வணிகர்கள், பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பினரும் சங்கமமாகும் திருமழிசை சந்தையில் ஏதேனும் ஒருவருக்கு கரோனா கண்டுபிடிக்கப்பட்டாலும், அது மளமளவென மற்றவர்களுக்குத் தொற்றி, அடுத்த சில நாட்களில் புதிய நோய்த்தொற்று மையத்தை உருவாக்கி விடக்கூடும்.
திருமழிசை சந்தை நோய்த்தொற்று மையமாக மாறுவதைத் தடுக்க அங்குள்ள வணிகர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு கரோனா சோதனை செய்யப்பட வேண்டும். அதுமட்டுமின்றி, அங்குள்ளவர்கள் கையுறை அணிவது, முகக்கவசம் அணிவது, தனி மனித இடைவெளியை உறுதி செய்வது, குறிப்பிட்ட நேரத்துக்கு ஒரு முறை கைகளையும், முகங்களையும் கழுவுவது உள்ளிட்ட நோய்த்தடுப்பு நடைமுறைகளை பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும். திருமழிசை சந்தையை முழுமையான சுகாதார கண்காணிப்புக்குள் கொண்டு வந்து, அங்கு சிறப்பு காவல் அதிகாரிகளையும், சுகாதார அதிகாரிகளையும் நியமிக்க வேண்டும் " எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: விரைவில் நல்ல முடிவை அறிவிப்பதாக அமைச்சர் உறுதியளித்திருக்கிறார் - ஆர்.கே. செல்வமணி