நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் கரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (நவ.05) கோயம்புத்தூர் விமான நிலையம் வந்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அவரிடம் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்குவது குறித்த கேள்வி எழுப்பட்டது. அதற்குப் பதிலளித்த முதலமைச்சர், "இந்தியா ஜனநாயக நாடு, இங்கு யார் வேண்டுமானலும் அரசியல் கட்சி தொடங்கலாம். நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்குவது அவரது தனிப்பட்ட விருப்பம்" எனத் தெரிவித்தார்.
முன்னதாக நடிகர் விஜய் அரசியல் கட்சியைத் தேர்தல் ஆணையத்தில், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் பதிவு செய்ய விண்ணப்பம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. அத்துடன் அந்தக் கட்சித் தலைவர் பத்மநாபன், பொதுச்செயலாளர் எஸ்.ஏ. சந்திரசேகர், பொருளாளர் ஷோபா எனவும் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது.
இது குறித்து விஜய்யின் மக்கள் தொடர்பு அலுவலர் ரியாஸ் அகமது, "விஜய் அரசியல் கட்சி விண்ணப்பம் தொடர்பாக பரவிவரும் செய்திகள் உண்மையல்ல" எனத் தெரிவித்தார். இதற்கிடையில், எஸ்.ஏ. சந்திரசேகர், அரசியல் கட்சியைப் பதிவு செய்தது தான்தான் எனவும், ஆனால் விஜய் அரசியலுக்கு வருவதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.
அதற்கு மறுப்புத் தெரிவிக்கும் விதமாக நடிகர் விஜய் விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், "எனது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர், அரசியல் கட்சியைத் தொடங்கி உள்ளார் என்பதை சமூக வலைதளங்கள் வாயிலாக அறிந்தேன். அவர் தொடங்கியுள்ள கட்சிக்கும் எனக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எந்தவிதத் தொடர்பும் இல்லை" எனத் தெரிவித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இதையும் படிங்க: எனக்கும் அந்தக் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை - தந்தைக்கு எச்சரிக்கை விடுத்த விஜய்