ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையிலுள்ள நளினி மற்றும் முருகனை லண்டனில் உள்ள முருகனின் சகோதரியுடனும், இலங்கையிலுள்ள முருகனின் தாயுடனும் வாட்ஸ்-ஆப் மூலம் பேச அனுமதிக்கக் கோரி, நளினியின் தாய் பத்மா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்குரைஞர் நடராஜன், நளினி மற்றும் முருகனை வெளிநாடுகளில் உள்ள உறவினர்களுடன் பேச அனுமதிப்பது தொடர்பாக, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளதாகத் தெரிவித்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் அனுமதி தான் கேட்டுள்ளீர்கள்? ஏன் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யவில்லை? எனக் கேள்வி எழுப்பி இருந்தனர். அதற்கு பதிலளித்த வழக்குரைஞர், அதற்குத் தங்களுக்கு அதிகாரம் இல்லை என்றும், மத்திய அரசுக்குத்தான் அதிகாரம் உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு இன்று(ஜூலை.27) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞர் கார்த்திகேயன், பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக கைதிகளை வெளிநாட்டில் உள்ளவர்களிடம் பேச அனுமதிப்பதில்லை என்று தெரிவித்தார்.
இதையடுத்து, நளினி மற்றும் முருகன் ஆகியோருக்கு வெளிநாடுகளில் உள்ள தங்களது உறவினர்களுடன் பேச, ஒருநாள் மட்டும் அனுமதி அளிப்பது தொடர்பாக மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும், அந்த நாள் எப்போது என்பது குறித்து வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி பதிலளிக்குமாறும் உத்தரவிட்டு, விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: ஓபிசி இடஒதுக்கீடு விவகாரம்: மத்திய அரசுக்கு எதிராக கைகோர்த்த தமிழ்நாட்டு எம்பிக்கள்!