சென்னை: சென்னை பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் ஆசிரியர் சங்க நிர்வாகிகளிடம் நவம்பர் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறப்பு குறித்தும், இல்லம் தேடி கல்வி திட்டம் தொடர்பாகவும் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. பள்ளிக்கல்வி ஆணையர் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் கல்வித்துறை உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் தாஸ், "கடந்த 19 மாதங்களாக மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை. இந்த நிலையில் மாணவர்களின் கற்றல் குறைப்பாட்டை போக்குவதற்காக இல்லம் தேடி கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இல்லம் தேடி கல்வித் திட்டம் மிகவும் சவாலான ஒன்று.
'கற்போம் எழுதுவோம்' என்ற திட்டத்தில் சரியான முறையில் தன்னார்வலர்கள் நியமனம் செய்யாதது, அவர்களுக்கு உரிய ஊதியம் வழங்காதது போன்ற காரணங்களால் அத்திட்டம் வெற்றி பெறவில்லை. அதேபோல் இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் நடந்து விடக்கூடாது. தன்னார்வலர்களுக்கு ஊதியம் தருவதுடன், அவர்களுக்கு ஒரு சான்றிதழும் அளிக்க வேண்டும்.
சமூக வலைதளங்களில் ஆசிரியர்களுக்கு பூஜ்ய கலந்தாய்வு நடத்தப்படும் என்ற தகவல் பரவிவந்தது. ஆனால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை ஆணையர், கட்டாயம் இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படாது என கூறியுள்ளார். இது ஆசிரியர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தை செயல்படுத்துவது சவாலாகவே இருக்கும். தற்பொழுது தன்னார்வலர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் தேர்வு செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். அதில் பிரச்னைகள் இருப்பதால், தேர்வு செய்தவதற்கான வழிகாட்டுதல்களையும் வழங்க வேண்டும்" என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய தமிழ்நாடு தொடக்க நடுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில செயலாளர் சேகர், "இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை மாலை நேரத்தில் 5 மணி முதல் 7 மணி வரையில் பாடங்களை கற்பிக்க வேண்டும். 6 முதல் 8ஆம் வகுப்பு வரையில், பட்டதாரிகளை கொண்டு கற்பிக்க வேண்டும் என்ற திட்டத்தை மாநில அரசு 200 கோடி நிதியில் செயல்படுத்துகிறது.
தன்னார்வலர்களுக்கு திட்டம் 6 மாதம் என கூறுவதால், மாதம் 4 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களை பயன்படுத்தப்பட கூடாது. கரோனா தொற்று பாதுகாப்பு விதிமுறைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: மினி பஸ்ஸில் தவறி விழுந்த பெண் உயிரிழப்பு - பதைபதைக்க வைக்கும் காணொலி!