சென்னை: சிவன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்த மனுவில், "நீலகிரி மாவட்டம் நெடுக்காடு கிராமத்தில் படுகர் இன மக்களின் குலதெய்வமான கெத்தை அம்மன் கோயிலில் பூஜை உள்ளிட்ட விழாக்களை அந்த இன மக்களே செய்துவந்தனர்.
கடந்த 1994ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்ட நிலையில், அந்தக் கோயிலுக்கு அதே கிராமத்தைச் சேர்ந்த இரண்டாம் வகுப்பு படித்த ஏழு வயது சிறுவன் பூசாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
பாதிப்பிற்கு உள்ளாகும் கல்வி
இதுபோன்று, பூசாரியாக நியமிக்கப்படும் சிறுவர்களால் பள்ளி செல்ல முடியாது. உணவை அவர்களே சமைத்துச் சாப்பிடுவது, கோயில் பசுக்களின் பாலை கறந்து நெய் எடுத்து விளக்குகளுக்குப் பயன்படுத்துவது போன்றவற்றால் கல்வி தடைபடுகிறது.
இது கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்திற்கு எதிரானது. இது குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி குழந்தைகள் பாதுகாப்பு நலத் துறை அலுவலருக்கு மனு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை" எனக் குறிப்பிட்டிருந்தார்.
வீடுதோறும் கல்வித் திட்டம்
இந்த வழக்கு, பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பி.டி. ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசு சார்பில் முன்னிலையான அரசு தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், "கோயில் மரபுப்படி சிறுவன் கோயிலை விட்டு வெளியில் வரக்கூடாது. தமிழ்நாட்டில் வீடுதோறும் கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது" எனத் தெரிவித்தார்.
இதையடுத்து, சிறுவனுக்கு கல்வி வழங்க என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பது குறித்து தமிழ்நாடு அரசு விரிவான அறிக்கைத் தாக்கல்செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்குத் தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க: 12,959 திருக்கோயில்களில் ஒருகால பூஜை நடைபெற ரூ.129 கோடி ஒதுக்கீடு