சென்னை: கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தின் விழிஞ்ஞம் கடற்பகுதியில் கடந்த மார்ச் மாதம் 18ஆம் தேதி தோணி மூலம் கடத்திவரப்பட்ட 300 கிலோ ஹெராயின், ஐந்து ஏ.கே-47 துப்பாக்கிகள், 1,000 தோட்டாக்கள் ஆகியவை சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்த கடலோர பாதுகாப்புப் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.
அவற்றை கடத்தி வந்த இலங்கையைச் சேர்ந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக விழிஞ்ஞம் காவல் துறையினர் கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இருவர் கைது
அதனைத் தொடர்ந்து, இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டு கடந்த மே மாதம் 1ஆம் தேதி ஆயுதத் தடைச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட சுரேஷ், சௌந்தரராஜன் ஆகிய இருவர் தேசிய புலனாய்வு முகமையால் கைது செய்யப்பட்டனர்.
7 இடங்களில் அதிரடி சோதனை
அதனைத் தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி இவ்வழக்கு தொடர்பாக தமிழ்நாட்டின் சென்னை, திருவள்ளூர் மற்றும் கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டங்களின் ஏழு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அலுவலர்கள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
குறிப்பாக, சென்னை வளசரவாக்கம் முரளி கிருஷ்ணா நகர் தாஜ் டவரில் உள்ள சத்குணம் (எ) சபேசன் (46) எனும் இலங்கைத் தமிழர் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை ஆய்வாளர் ஸ்ரீகாந்த் தலைமையில் 5 அலுவலர்கள், வளசரவாக்கம் காவல் துறையினர் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர்.
இந்தச் சோதனையில் விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்பான பல்வேறு ஆவணங்கள், புத்தகங்கள், செல்போன், சிம் கார்டுகள், டேப்லட் உள்ளிட்ட ஏழு டிஜிட்டல் சாதனங்களும் தேசிய புலனாய்வு முகமை அலுவலர்களால் பறிமுதல் செய்யப்பட்டது.
இலங்கை தமிழர் கைது
இதனைத் தொடர்ந்து, இவ்வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அலுவலர்கள் தொடர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு ஆயுதங்கள், போதைப்பொருள் உள்ளிடவற்றை கடத்த உடந்தையாக செயல்பட்டவரும், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மறுமலர்ச்சிக்கு உழைப்பவருமான இலங்கைத் தமிழர் சத்குணம் (எ) சபேசன் நேற்று (அக். 5) தேசிய புலனாய்வு முகமை அலுவலர்கள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஹெராயின் பறிமுதல்செய்யப்பட்ட வழக்கு: வெளியான திடுக்கிடும் தகவல்!