சென்னை: தனியார் பொறியியல் கல்லூரி ஆசிரியருக்குக் குறைவான சம்பளம் வழங்கியதால், அவர் தற்கொலை செய்துக்கொண்ட விவகாரத்தில் உயர் கல்வித்துறை செயலாளர் நேரில் ஆஜராகத் தேசிய மனித உரிமைகள் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
தனியார் பொறியியல் கல்லூரி ஆசிரியர் சங்கத்தின் நிறுவனர் கார்த்திக் அளித்த புகாரின் அடிப்படையில், குறைவான ஊதியம் வழங்கியதால் பேராசிரியர் ரவி தற்கொலை செய்துக்கொண்டதாக எழுந்த புகாரை மாநில மனித உரிமைகள் ஆணையம் விசாரித்து வந்தது.
இந்நிலையில், விவேகானந்தா மகளிர் தொழில்நுட்பக் கல்லூரி மீது பேராசிரியர்களுக்குக் குறைவான ஊதியம் வழங்குவது, பணப்பலன்களைத் தடுப்பது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் எழுந்தன. இது குறித்து, மாநிலத்தில் பேராசிரியர்கள் தற்கொலை தொடருவது குறித்தும் 6 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உயர் கல்வித்துறை செயலாளர் அபூர்வா, ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் 2020ஆம் ஆண்டு ஜூலை 6ஆம் தேதி அறிவுறுத்தியிருந்தது.
ஆனால், பலமுறை நினைவூட்டியும் இதுவரை அறிக்கை தாக்கல் செய்ததால், உயர்கல்வித் துறை செயலாளர் அபூர்வா, ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் மார்ச் 26ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் தர வேண்டும் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
அதில், பிப்ரவரி 19ஆம் தேதிக்குள்ளாக அறிக்கை தாக்கல் செய்துவிட்டால் நேரில் ஆஜராக வேண்டியதில்லை என்றும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டத்துக்குட்பட்ட விவேகானந்தா மகளிர் தொழில்நுட்பக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணியாற்றியவர் ரவி (53). முன்னர் பணியாற்றிய கல்லூரியில் ரூ.60,000 மாத ஊதியமாகப் பெற்று வந்த ரவிக்கு, விவேகானந்தா கல்லூரியில் மாத ஊதியமாக ரூ.25,000 வழங்கியதால் ஏற்பட்ட கடும் மனவுளைச்சலின் காரணமாக 2020ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் தேதி ஈரோட்டிலுள்ள அவரது இல்லத்தில் வைத்து தன் உயிரை மாய்த்துக்கொண்டார்.