சென்னை: இது குறித்து அவர் கூறுகையில், ”நீட் நுழைவுத் தேர்விலிருந்து தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டிலுள்ள இளநிலை மருத்துவ இடங்களுக்கு விலக்கு பெறுவதற்காக, தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த செப்டம்பர் மாதம் ஏகமனதாக மசோதா நிறைவேற்றப்பட்டது.
ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்ட இந்த மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு ஆளுநர் அனுப்பிவைக்காமல் காலம் தாழ்த்திவந்தார். இந்நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் ஆளுநரின் ஜனநாயக விரோதப் போக்கை கண்டித்துவந்தன.
அரசியல் சட்டத்திற்கு விரோதமாகச் செயல்படும் ஆளுநரின் போக்கிற்கு எதிராக, சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம், தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம், பல்வேறு மாணவர் அமைப்புகளும் குரல் கொடுத்துவந்தன. நாடாளுமன்றத்திலும் இந்தப் பிரச்சினை, தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்களால் எழுப்பப்பட்டது.
மாநில உரிமைகளுக்கு எதிரான செயல்
ஆளுநர் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைச் சுட்டிக்காட்டி, நீட் நுழைவுத்தேர்வு சமூகநீதிக்கு எதிராக இல்லை என்ற காரணத்தைக் கூறி, அந்த மசோதாவை, தமிழ்நாடு அரசுக்கே திருப்பி அனுப்பி உள்ளார். ஆளுநரின் இந்தச் செயல் மாநில உரிமைகளுக்கு எதிரானது.
மத்திய பாஜக அரசு என்ன நினைக்கிறதோ அதை நடைமுறைப்படுத்தக்கூடிய ஒரு முகவராக தமிழ்நாடு ஆளுநர் செயல்படுகிறார். ஆளுநரின் இந்தப் போக்கு சமூகநீதிக்கும், கிராமப்புற மாணவர்களுக்கும், மாநிலத்தில் படிக்கும் மாணவர்களுக்கும், ஏழை எளிய மாணவர்களுக்கும், முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கும் எதிரானது.
இச்செயல் கடும் கண்டனத்திற்குரியது. தமிழ்நாடு ஆளுநர் தமிழ்நாடு சட்டப்பேரவையையும், தமிழ்நாடு மக்களின் உணர்வுகளையும் இழிவுப்படுத்தியுள்ளார். எனவே, மாநில உரிமைகளுக்கு எதிராகச் செயல்படும் ஆளுநரை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.
இந்த மசோதா குறித்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: நீட் தேர்வு விலக்கு - பிப்.5ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம்