டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி தர்மபுரம் ஆதீனம் கலைக்கல்லூரி முதல்வர் ஒழுங்கு நடவடிக்கையின் பேரில் மூன்று மாணவிகளையும், ஒரு மாணவரையும் நிரந்தரமாக கல்லூரியில் இருந்து நீக்கி உத்தரவிட்டார். மாணவ மாணவிகள் மது அருந்தியதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, அகில இந்திய தனியார் கல்லூரி பணியாளர்கள் சங்கத்தின் தலைவர் கார்த்திக், தேசிய மகளிர் ஆணையத்திற்கு புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், 'டாஸ்மாக் என்பது தமிழக அரசின் மது கொள்முதல் மற்றும் விற்பனை நிறுவனம் ஆகும். மது அருந்துவது குற்றமென்றால் அரசே அதை விற்காது. தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1937-இன் படி மது விற்பனையை கட்டுப்படுத்த வேண்டுமென்றால், அதை அரசே செய்ய வேண்டிய நிலையுள்ளது. சட்டம் அவ்வாறு இருக்கையில், நண்பர்களாக ஆணோ, பெண்ணோ, இணைந்து மது அருந்துவதும் சட்டப்படி குற்றமல்ல.
ஒரு பெண் மதுவிற்கு அடிமையாவது குடும்பத்தையே சீர்குலைக்கும் என்பதில் ஐயமில்லை. அது நிச்சயமாக சமூக பிரச்சனை தான். ஆனால் சட்ட பிரச்சனை கிடையாது. சமூக பிரச்னையை களையத்தான் கல்விக் கூடங்கள் உள்ளன. மாணவர் செய்த தவறுக்காக, அவர்களை தற்காலிகமாக நீக்குவது, பெற்றோரை அழைத்து பேசுவது, உளவியல் ஆலோசனைகள் கொடுப்பது, அபராதம் கொடுப்பது போன்று எந்த நடவடிக்கையும் எடுக்காமல் நிரந்தரமாக அவர்களை கல்லூரியில் இருந்து நீக்கியது தவறு. பிரச்சனைகளிலிருந்து கல்லூரி நிர்வாகம் தப்பிப்பதற்கு மாணவர்களின் கல்வியை நிறுத்துவது சரியல்ல. அவ்வாறு செய்தால் அது சட்ட விரோதம்' எனத் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் சியாமளா குந்தர், தர்மபுரம் ஆதீனம் கலைக் கல்லூரிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், அகில இந்திய தனியார் கல்லூரிகள் சங்கத்தின் தலைவரிடம் இருந்து பெறப்பட்டப் புகாரில், மாணவிகள் துன்புறுத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இதுகுறித்தான சட்ட நடவடிக்கையை 30 நாட்களுக்குள் எடுத்து ஆணையத்திற்கு தெரிவிக்க வேண்டுமென அதில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: குரூப் 4 தேர்வு முறைகேடு சர்ச்சை - விடிய விடிய விசாரணை