திருப்பூர்: 'தோள் கொடுப்போம் தொழில்களுக்கு' என்ற தலைப்பில் இன்று (ஆக.25) குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் நடந்த திருப்பூர் மண்டல மாநாட்டில் முதலமைச்சர் கலந்து கொண்டு ரூ.167.58 கோடி மதிப்புள்ள பல்வேறு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கும் தொழில்முனைவோர்களுக்கும் அளித்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
1. தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனம் (TANCOIR): தமிழ்நாட்டில் தேங்காய் மட்டையிலிருந்து மதிப்புகூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் சுமார் 4,500 நிறுவனங்கள், ஆண்டிற்கு சுமார் 8,000 கோடி ரூபாய் விற்று முதல் ஈட்டும் வகையில் செயல்பட்டு வருகின்றன. இத்தொழில் மேலும் பன்மடங்கு அதிகரிக்க தேவையான வளங்களும், வாய்ப்புகளும் இங்கு உள்ளதைக் கருத்திற்கொண்டு தமிழ்நாடு அரசு, 2022-23ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், கயிறு வணிக வளர்ச்சிக்கென 5 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனம் அமைக்கப்படுமென அறிவித்தபடி, கோயம்புத்தூரில் “தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனம்” என்ற புதிய நிறுவனத்தை முதலமைச்சர் இன்று தொடங்கி வைத்தார்.
இந்நிறுவனத்தின் மூலம் 36.60 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் 26.58 கோடி ரூபாய் அரசு உதவியுடன் 4 புதிய கயிறு குழுமங்கள் அமைப்பதற்கான ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார். கயிறு உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டுள்ள 6 தொழில் முனைவோர்களுக்கு மானிய உதவிகளையும் முதலமைச்சர் வழங்கினார்.
2. தமிழ்நாடு கடன் உத்தரவாதத் திட்டம் (TNCGS): குறு, சிறு மற்றும் நடுத்தரத்தொழில் நிறுவனங்கள், நிதி வசதியினை பிணையமின்றி எளிதில் பெற 'தமிழ்நாடு கடன் உத்தரவாதத் திட்டம்' என்ற புதிய திட்டத்தினை முதலமைச்சர் தொடங்கினார்.
இத்திட்டத்தின்கீழ், ரூ.40 லட்சம் வரையுள்ள கடன்களுக்கு 90 விழுக்காடு உத்தரவாதமும், ரூ.40 லட்சம் முதல் ரூ.2 கோடி வரை உள்ள கடன்களுக்கு 80 விழுக்காடு உத்தரவாதமும், ஒன்றிய அரசின் குறு மற்றும் சிறு தொழில்களுக்கான கடன் உத்தரவாத நிதியத்துடன் (CGTMSE) இணைந்து தமிழ்நாடு அரசு அளிக்கிறது. இத்திட்டத்தின் சிறப்பம்சமாக, பொதுவாக வங்கிக்கடன் பெறுவதில் உள்ள நடைமுறைச்சிக்கல்கள் களையப்பட்டு அனைத்து நடைமுறைகளும் இணையதளம் வாயிலாக செயல்படுத்தப்படுவதால், கடன் விண்ணப்பப் பரிசீலனை செய்யும் நேரம் குறைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தாய்கோ வங்கியிலிருந்து கடன்பெறும் தொழில் முனைவோர்களுக்கும் பயனளிக்கும் விதமாக இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டத்தின் கீழ் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான கடன் “தரமதிப்பீடு” (Credit score), நிறுவனங்களின் ‘கடந்த கால கடனை திருப்பிச்செலுத்திய காரணி (CIBIL score)’ மட்டுமல்லாமல் இதர நிதிநிலை செயல்பாடுகளையும் கொண்டு இணையதளம் வாயிலாகவே செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இத்தரமதிப்பீடு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் மூலம் கடன் பெற பேருதவியாக அமையும்.
மேற்கண்ட இத்தைகைய நடைமுறைகளை செயல்பாட்டிற்குக் கொண்டு வரும் முதல் மாநிலம் தமிழ்நாடே என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கென தமிழ்நாடு அரசு 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, இத்திட்டத்தினை தொடங்கி வைக்கும் விதமாக, கடன் உத்தரவாதத்துடன் 1.19 கோடி ரூபாய்க்கான கடன் தொகையினை, திருப்பூர் மண்டலத்தைச்சார்ந்த 5 பயனாளிகளுக்கு முதலமைச்சர் வழங்கினார். இதுமட்டுமின்றி, 70-க்கும் மேலான பிற பயனாளிகள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் 17 கோடி ரூபாய் அளவிற்கு கடன் பெற்று இன்றைய தினமே இத்திட்டத்தின் வாயிலாகப் பயன்பெறுவர்.
3. தமிழ்நாடு வர்த்தக வரவு, தள்ளுபடி செயல்முறை தளம்: குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் விற்பனை செய்த பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான தொகையை மிகவும் காலதாமதமாக பெறும் சூழல் உள்ளது. இதற்குத்தீர்வு காணும் நோக்கில், முதற்கட்டமாக சட்டப்பூர்வ வாரியங்கள், மாநிலத்தின் அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தலைமை கூட்டுறவு நிறுவனங்களை, ட்ரட்ஸ் (TReDS) எனப்படும் வர்த்தக வரவுகள் மற்றும் தள்ளுபடி தளங்களின்கீழ் கொண்டு வர தேவையான மென்பொருள் உருவாக்கப்பட்டு தமிழ்நாடு வர்த்தக வரவுகள் மற்றும் தள்ளுபடி தளத்தினை (TN TReDS) முதலமைச்சர் தொடங்கினார்.
இதன் சிறப்பம்சமாக, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் விற்பனை பட்டியல்கள் (Sale Bills) மீதான கடன் அளிக்கும் வங்கிகளுக்கு 179 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடமிருந்து பணம் பெறப்படவில்லை எனில் 180ஆவது நாள் தமிழ்நாடு அரசின் தாய்கோ வங்கி Auto debit முறையில் தொகையை வங்கிக்கு அளிக்கும்.
தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில் TN TReDS தளங்களுடனுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டு, இத்திட்டத்தின்கீழ் பதிவு செய்த முதல் 3 தொழில் முனைவோர்களுக்கான தள்ளுபடி கடன் தொகை வழங்கப்பட்டது.
4. தமிழ்நாட்டின் MSME-களை எளிதாக்குதல்(FaMe TN): குறைந்த வட்டியில் பிணையில்லா கடன் பெறுதல், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், ஏற்றுமதிக்கு தேவையான உதவிகளைச்செய்தல், விளம்பரப்படுத்துதல், சந்தைப்படுத்துதல், நவீன தொழில் நுட்பங்களை செயல்படுத்துதல், தொழிலாளர்களுக்கு தேவையான திறன் மேம்பாட்டுப்பயிற்சிகளை அளித்தல், வரி மற்றும் தணிக்கை போன்றவைக்கான வசதிகள் ஆகிய தேவைகளில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உதவிட M-TIPB (MSME-Trade and Investment Promotion Bureau) நிறுவனம் செயல்பட்டு வந்தது.
தொழில் முனைவோர்கள் தங்களது தொழிலில் முழுக்கவனத்தையும் செலுத்திடவும், அவர்களது தேவைகளை நிறைவேற்றிடவும் தமிழ்நாடு அரசால் “தோள் கொடுப்போம் தொழில்களுக்கு” என்ற புதிய திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனைச் செயல்படுத்த M-TIPB நிறுவனம் இன்று முதல் “FaMe TN” (Facilitating MSMEs of Tamil Nadu) என்ற புதிய பெயரில் செயல்படும்.
அனைவருக்கும் அனைத்தும் என்ற வகையில் சமச்சீரான ஒருங்கிணைந்த வளர்ச்சியினை குறிக்கும் விதமாக அமைந்துள்ள “FaMe TN” முன்னெடுப்பின் இலச்சினையினை தமிழ்நாடு முதலமைச்சர் இன்று வெளியிட்டு, “தொழில் தொடங்குவது எப்படி” என்ற FaMe TN-ன் தமிழ் மற்றும் ஆங்கிலப் புத்தகங்களை வெளியிட்டார்.
புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்: இம்மாநாட்டில், முதலமைச்சர் முன்னிலையில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் சிறு வணிகர்கள் இணைய வர்த்தக தளங்களின் வாயிலாக புதிய வாய்ப்புகளை பெறுவதற்கு, வழிகாட்டிடும் வகையில், FaMe-TN நிறுவனம் மற்றும் Open Network for Digital Commerce (ONDC) நிறுவனங்களுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டன.
FaMe-TN நிறுவனம், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி பொருளாதார சட்டத்திற்குட்பட்டு இருக்கும் வகையில், வழிகாட்டுதல் பெற Institute of Chartered Accountants of India (ICAI) நிறுவனத்துடனும், சுற்றுச்சூழலுக்கு உகந்த வளர்ச்சியாக அமைந்திட World Resource Institute (WRI) நிறுவனத்துடனும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இத்திட்டங்கள் அனைத்தும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் செயல்படும் தொழில் ஆணையரகத்தின் வாயிலாக செயல்படுத்தப்படும்.
புதிய திட்டங்களுக்கு அடிக்கல்
- கோயம்புத்தூர் (மா) - சொலவம்பாளையம் கிராமத்தில் 42.42 ஏக்கர் பரப்பளவில் ரூ.18.13 கோடி திட்ட மதிப்பீட்டில் ரூ.9.06 கோடி அரசு மானியத்துடன் கொசிமா (COSIMA) புதிய தனியார் தொழிற்பேட்டை,
- கோயம்புத்தூர் (மா) - குறிச்சி தொழிற்பேட்டையில் ரூ.22 கோடி மதிப்பீட்டில் தரைத்தளம் மற்றும் மூன்று தளங்களுடன் 510 தொழிலாளர்கள் தங்கும் விடுதி
- சேலம் (மா) - அரியகவுண்டம்பட்டியில் ரூ.24.55 கோடி திட்ட மதிப்பீட்டில் வெள்ளி கொலுசு தயாரிக்கும் குறுந்தொழில் முனைவோருக்காக தரைத்தளம், மூன்று தளங்களுடன் 100 தொழிற்கூட அலகுகள் கொண்ட அடுக்குமாடி உற்பத்தி வளாகம், காட்சி மையம் மற்றும் பொது வசதி மையம் என மொத்தம் ரூ.64.68 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் இன்று அடிக்கல் நாட்டினார்.
பொது வசதி மையம் திறப்பு: திருப்பூர் மாவட்டம், நாரணபுரத்தில் ரூ.15.34 கோடி திட்ட மதிப்பீட்டில் பின்னலாடை தயாரிக்கும் குறுந்தொழில் முனைவோருக்காக பொது வசதி மையத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்தியூர் செல்வராஜ், கு. சண்முகசுந்தரம், இ.ஆர். ஈஸ்வரன் எம்எல்ஏ, தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில் சங்கம் (TANSTIA) உள்ளிட்ட தொழில் முனைவோர் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் எனப் பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: ஒருமையில் அதட்டினாரா கே.என்.நேரு? - மேயர் பிரியா விளக்கம்