எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் இன்று, நோயாளிகளுக்கு அதிநவீன சிடி ஸ்கேன் வசதியை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செயல்பாட்டுக்கு கொண்டு வந்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ” தமிழகத்தில் 115 சிடி ஸ்கேன்கள் மருத்துவமனைகளில் பொருத்தப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. இந்த அதிநவீன சிடி ஸ்கேன் மூலம் ஆஞ்சியோ சிடி ஸ்கேன் இரண்டு வினாடிகளிலும், முழு உடலை 10 வினாடிகளிலும் ஸ்கேன் செய்ய முடியும்.
எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை சிறப்பாக செயலாற்றி, கரோனா பாதித்த 1,100 குழந்தைகள் இதுவரை சிகிச்சை பெற்று திரும்பியுள்ளனர். மாநிலம் முழுவதும் 64 ஆயிரத்து 193 குழந்தைகள் கோவிட் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று குணமாகியுள்ளனர். குழந்தைகளுக்கு கரோனா தொற்று 5 சதவீதத்திற்கும் குறைவாகவே பரவுகிறது. வளர்ந்த நாடுகளிலும், அண்டை மாநிலங்களிலும் இரண்டாவது அலை கரோனா பரவி வரும் நிலையில், தமிழகத்தில் தொற்று பரவல் குறைந்து வருகிறது.
பண்டிகை காலங்களில் பொருட்களை வாங்க வருபவர்களும், விற்பவர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து பாதுகாப்பு நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அதனையும் மீறி அதிகளவில் கூட்டம் கூடினால் அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கும். குழந்தைகள் மற்றும் வயதானவர்களை அதிகம் கூடும் பகுதிகளுக்கு அனுப்பக்கூடாது. நல்ல ஆரோக்கியமான இளைஞர்கள் பண்டிகை காலப் பொருட்களை சென்று வாங்க வேண்டும்.
டெல்லியில் தற்போது பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம், தசரா பண்டிகையின் போது கவனக்குறைவாக செயல்பட்டதால் தான். எனவே, பண்டிகை காலங்களில் பாதுகாப்பு வழிமுறைகளை அனைவரும் தவறாமல் பின்பற்றவும், அதனை கண்காணிக்கவும், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது “ என்றார்.
இதையும் படிங்க: 'மீண்டும் செமஸ்டர் தேர்வு வேண்டும்': முதுகலை மாணவர்கள் நூதன முறையில் கோரிக்கை