சென்னை: வடபழனி ஆதிமூலப் பெருமாள் கோயில் நுழைவு வாயிலில் இருந்த பூஜை பொருட்கள், மலர் மாலைகள் விற்பனை கடைகளை அகற்றி, ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக அவர்களுக்கு 8 லட்சம் ரூபாய் செலவில் தற்காலிகமாக மாற்று இடம் வழங்கி அந்த கடைகளை அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து வடபழனி முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த அவர் கோயிலில் நடைபெற்று வரும் புனரமைப்புப் பணிகளை ஆய்வு மேற்கொண்டார். பின்னர், வடபழனி ஆதிமூலப்பெருமாள் கோயிலில் ஆய்வு மேற்கொண்டு, சுவாமி தரிசனம் செய்தார்.
வடபழனி முருகன் கோயிலில் விரைவில் குடமுழுக்கு
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, “ஆதிமூலப்பெருமாள் கோயில் நுழைவு வாயிலிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு இந்து சமய அறநிலையத்துறைக்கு அதிகாரம் இருந்தாலும், ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக 8 லட்சம் ரூபாய் செலவில் தற்காலிகமாக மாற்று இடத்தில் கடைகள் அமைத்துக்கொடுத்து தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
வடபழனி முருகன் கோயில் குடமுழுக்கு பனிகள் இரண்டு வருடங்களாக நடைபெற்று வருகிறது. வடபழனி முருகன் கோயிலில் நவம்பர் மாதத்திற்குள் குடமுழுக்கு நடத்தப்படும். வடபழனி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக திருமண மண்டபங்கள், மொட்டை அடிக்கும் இடங்களில் கூடுதல் வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
40 கோடி ரூபாய் செலவில் வடபழனி கோயில் அர்ச்சகர்களுக்கு வீடுகள் கட்டும் பணிகளும் விரைவில் தொடங்கும். குடமுழுக்குப் பணிகள் நடைபெறும் கோயில்களில் சிதிலமடைந்த கோயில்களை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. குடமுழுக்கு பணிகள் நடைபெறாத இடங்களில் சிதிலமடைந்த கோயில்களை சீர் செய்ய சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.
திருப்பதிக்கு நிகராக திருச்செந்தூர் கோயில்
திருப்பதிக்கு நிகராக திருச்செந்தூர் கோயில்களை பக்தர்களின் வசதிக்காக மேம்படுத்த வரைவு திட்டம் தயாரிக்கப்பட்டு, வெகு விரைவில் பணிகள் தொடங்கப்படவுள்ளது.
பெரியாபாளையம் பவானியம்மன் திருக்கோயில் மேம்படுத்தப்படும். தமிழ்நாட்டில் பக்தர்கள் அதிகமாக வரும் 553 திருக்கோயில்கள் கண்டறியப்பட்டுள்ளது. அந்த கோயில்களை மேம்படுத்துவதற்கு வரைவு திட்டம் தயாரிக்க அறிவுறுத்தியுள்ளோம். சட்டப்பேரவையில் அறிவித்த 300 திருக்கோயில்களின் பணிகளை தொடங்கி அடுத்த மானிய கோரிக்கைக்குள் நிறைவேற்றப்படும்” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 216 துணை மின்நிலையங்களும் ஒரே நேரத்தில் மேம்படுத்தப்படும் - அமைச்சர் செந்தில் பாலாஜி