சென்னை: ஆவடி தொகுதிக்குட்பட்ட பகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகள், மழைநீர் கால்வாய் பணிகளை தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 35 லட்சம் ரூபாய் செலவில் கட்டமைக்கப்பட்ட தானியங்கி குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைத்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், யாரோ பெற்ற பிள்ளைக்கு நான் தான் தகப்பன் போல திமுக மருத்துவ இடஒதுக்கீடு விவகாரத்தில் நடந்து கொள்வது கீழ்த்தரமான செயல்பாடு என்றார்.
அதிமுக அரசின் சீரிய முயற்சியாலும், முதலமைச்சரின் துணிச்சலான நடவடிக்கைகளாலும்தான் அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவு நனவாகியுள்ளது.
இடஒதுக்கீடு குறித்து பேரவையில் வரைவு தாக்கல் செய்தபோது, வடிவேலு பாணியில், “வரும், ஆனால் வராது” என்ற நிலைப்பாட்டில் திமுக கேலி செய்தார்கள். தற்போது ஆளுநர் ஓப்புதல் அளித்தவுடன் நாங்களூம் ரவுடிதான் என்பது போல, திமுக உரிமை கொண்டாடுகிறார்கள்.
அதிமுக அரசு கொண்டுவந்த இந்த இடஒதுக்கீடு விவகாரத்தில் யாருக்கும் பங்கில்லை. அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரியில் இடஒதுக்கீடு வழங்குவது என்பது அனைவரின் விருப்பமாகும். இந்த விவகாரத்தில் ஸ்டாலின் அழுத்தம் கொடுத்தார் என்பது நகைப்புக்குரியது என்றார் அமைச்சர்.
தொடர்ந்து பேசிய அவர், ரஜினி அரசியலுக்கு வரவேண்டாம் என்று அதிமுக என்றுமே கூறியதில்லை. அவர் ஒரு நல்ல நடிகர், நல்ல மனிதர். எம்.ஜி.ஆரின் ஆட்சியை அமைப்பதாக ரஜினி கூறியிருந்தார். அந்த ஆட்சியைதான் தமிழ்நாடு அரசு வழங்கிகொண்டிருக்கிறது. அதிமுக ஆட்சி தொடர்வதையே ரஜினி விரும்புவார் என்று நம்புவதாக கூறினார்.