சென்னை: இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயிலில் நடக்கும் குடமுழுக்கிற்கான திருப்பணிகளைப் பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய சேகர்பாபு, "அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில் மிகப் பழமைவாய்ந்த திருக்கோயிலாகும். இக்கோயிலின் குடமுழுக்கு 2007ஆம் ஆண்டு நடைபெற்றது. அதன்பிறகு 2019ஆம் ஆண்டு ஆகமவிதிப்படி நடைபெற்றிருக்க வேண்டும்.
தமிழ்நாடு முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்றதும், இக்கோயிலின் திருப்பணிகளை விரைவுப்படுத்தி குடமுழுக்கை விரைந்து நடத்த உத்தரவிட்டார். அதன்படி, முதலமைச்சரின் ஆலோசனைப்படி கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து திருப்பணிகள் விரைவுப்படுத்தப்பட்டு, தற்பொழுது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
ஜனவரி 23இல் குடமுழுக்கு
இக்கோயில் திருப்பணிகளை விரைந்து முடிப்பதற்கு கோயில் தக்கார் ஆதிமூலம், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் குமரகுருபரன் ஆகியோர் பெருமுயற்சி எடுத்துக்கொண்டனர்.
அனைத்துப் பணிகளும் முடிவுபெற்று கோயில் குடமுழுக்கிற்குத் தயாராக உள்ளது. மேலும், வருகின்ற ஜனவரி 23ஆம் தேதியன்று குடமுழுக்கு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்தக் கோயிலில் உள்ள தியான மண்டபம், மடப்பள்ளி, பல மண்டபங்கள் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
தங்கத் தகட்டில் கொடிமரம்
அதுமட்டுமில்லாமல் 33 அடியில் தங்கத் தகடுகளாலான கொடிமரம், இக்கோயிலுக்கு மேலும் அழகூட்டுகிறது. இக்கோயிலில் உள்ள மரத்தேர், தங்கத்தேர் அழகுற புதுப்பிக்கப்பட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த தயாராக வைக்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்குத் தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை தேவைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
ரூ.13 கோடி செலவில் அடிப்படை வசதிகள்
இக்கோயிலில் முகூர்த்த நாள்களில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தி திருமணங்கள் நடத்துவதற்கு 43 முகூர்த்த மண்டபங்கள் அமைக்கப்பட உள்ளன. குடமுழுக்கிற்குப் பிறகு இந்தக் கோயிலின் அலுவலகம், கோயிலின் பின்புறம் உள்ள இடத்தில் சிறந்த முறையில் அமைக்கப்பட உள்ளது. காலணி பாதுகாப்பு மையம், முடி காணிக்கை செலுத்தும் இடம், குளியலறை வசதி உள்ளிட்ட பல்வேறு பணிகள் ரூ.13 கோடி செலவில் நடைபெற உள்ளது.
கரோனா கட்டுப்பாட்டு விதிகளுடன் அனுமதி
இக்கோயிலின் அருகேயுள்ள மிகப் பழமைவாய்ந்த ஆதிகேசவ பெருமாள் திருக்கோயிலிலும் குடமுழுக்கிற்கான திருப்பணிகள் தொடங்கப்பட்டு விரைவில் குடமுழுக்கு நடைபெறும். குடமுழுக்கில் பக்தர்கள் பங்கேற்பது குறித்து அப்போதைய கரோனா கால சூழ்நிலைக்கு ஏற்றவாறு நிச்சயம் அனுமதி அளிக்கப்படும்.
மேலும், வடபழனி ஆண்டவர் திருக்கோயில் அருகே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பக்தர்களுக்கு பெரிதும் இடையூறாக உள்ளது. போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தரத் தீர்வு காண திட்ட வரைவு தயாரிக்கப்பட்டுவருகிறது. இதன் அடிப்படையில், இங்கு ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தரத் தீர்வு நிச்சயம் ஏற்படும்.
வரவு, செலவு கணக்குகளில் வெளிப்படை
இறை சொத்து இறைவனுக்கே என்ற தாரகமந்திரத்தோடு இந்து சமய அறநிலையத் துறை சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது. மேலும், இந்தக் குடமுழுக்கிற்குப் பிறகு, அதற்கான வரவு, செலவு கணக்குகள் வெளிப்படையாக நிச்சயம் வெளியிடப்படும்" எனத் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது, இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் குமரகுருபரன், கோயில் தக்கார் ஆதிமூலம், திமுக மாவட்டச் செயலாளரும், மயிலாப்பூர் சட்டப்பேரவை உறுப்பினருமான மயிலை த. வேலு, தியாகராய நகர் சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ. கருணாநிதி, கோயில் இணை ஆணையர், துணை ஆணையர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: திருப்பரங்குன்றம் கோயிலில் ஒரே நாளில் 63 திருமணங்கள்