சென்னை: தமிழ்நாடு முழுவதும் வேட்டைத் தடுப்பு காவலர்களைக் கொண்டு, விலங்குகள் வேட்டையாடுவதைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பேசிய எம்.எல்.ஏ., செந்தில்குமார், கள்ளக்குறிச்சி தொகுதியில் உள்ள விவசாய நிலங்களைப் பாதுகாக்க சூரிய மின் வேலி அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதற்குப் பதிலளித்து பேசிய வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், கள்ளக்குறிச்சி தொகுதியில் உள்ள விவசாய நிலங்களில் யானை போன்ற விலங்குகளால் எந்த சேதாரமும் ஏற்படுவதில்லை எனக் கூறினார்.
மயில், மான் மற்றும் காட்டுப்பன்றி போன்ற விலங்குகளால் குறைந்த அளவில் மட்டுமே பயிர் சேதம் ஏற்படுவதாகவும், கடந்த ஆண்டு 8 நிகழ்வுகளில் 4.26 ஹெக்டேரில் மட்டுமே பயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்காக ரூ.1.16 லட்சம் விவசாயிகளுக்கு நஷ்ட ஈடாக வழங்கப்பட்டுள்ளதாகவும், சூரிய மின் வேலி அமைப்பது குறித்து நிதி நிலைக்கு ஏற்ப முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.
அதேபோல், தமிழ்நாடு முழுவதும் வேட்டைத்தடுப்பு காவலர்களைக்கொண்டு, விலங்குகள் வேட்டையாடுவதைத்தடுக்க உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
இதையும் படிங்க:பறவைகளைை வேட்டையாடிய 4 பேர் கைது: இரண்டு துப்பாக்கிகள், கார் பறிமுதல்!