சென்னை: மழையால் சாலை, வீடுகளில் வெள்ள நீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழை நீரை வெளியேற்றும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் இரவு, பகலாக ஈடுபட்டுள்ளனர். முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரடியாகச் சென்று பார்வையிட்டு ஆய்வுசெய்து, மக்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கிவருகின்றனர்.
அந்தவகையில், நேற்று (நவ. 12) எழிலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் செய்தியாளரைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டில் 534 இடங்களில் 214 இடங்களிலுள்ள மழை நீர் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. சென்னையில் மட்டும் 450 மரங்கள் சாய்ந்தது, அது சீர் செய்யப்பட்டுள்ளது.
தொலைபேசி மூலமாக எச்சரிக்கை
79 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவ உதவி பெற்றுள்ளனர். மழை குறைவு காரணமாக செம்பரபக்கம் ஏரியிலிருந்து நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது, பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து 18 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
இதனை அடுத்து பொதுமக்களுக்கு இரண்டு லட்சத்து 60 ஆயிரத்து 120 பேருக்குத் தொலைபேசி மூலமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன
மேலும், வடகிழக்குப் பருவமழை காலத்தில் பெய்த மழையின் காரணமாக 68651.91 ஹெக்டர் வேளாண் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. 5127.82 ஹெக்டர் பயிர்கள் சுமார் 33 விழுக்காட்டிற்கும் மேல் சேதமடைந்துள்ளன.
நெடுஞ்சாலைத் துறையின் ஐந்து பாலங்களும், 259 சிறு பாலங்களும், 1012.99 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகளும் சேதமடைந்துள்ளன. வேலூர் மாவட்டத்தில் உள்ள நீர்த் தேக்கத்திலிருந்து 18 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அங்கு 30,000-க்கும் மேற்பட்டோருக்கு மேலாக தொலைபேசி மூலமாக எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
இதுவரை 33 லட்சத்து 31 ஆயிரத்து 300 பேருக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த மழையினால் ஏற்பட்ட சேதம், இழப்பீடு குறித்து குழு அமைக்கப்பட்டு ஆய்வுமேற்கொள்ளப்பட்டு மத்திய அரசிற்கு அனுப்பப்படும். அதன் பின்னர் ஏற்பட்ட சேதத்திற்கான இழப்பீடு குறித்து முதலமைச்சர் அறிவிப்பார்.
நிவாரண நிதி நிலுவையில் உள்ளது
மேலும், பேரிடர் நிவாரண நிதி மத்திய அரசு, தமிழ்நாடு அரசிற்கு ஆண்டுக்கு ஆயிரத்து 360 கோடி ரூபாய் தருவது வழக்கம். இந்தாண்டிற்கான (2020-21 நிதியாண்டு) பேரிடர் நிவாரண நிதி 20 விழுக்காடு (300 கோடி ரூபாய்) நிலுவையில் உள்ளது" எனக் கூறினார்.