சென்னை: நெல்கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. நெல் மூட்டைகளை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, வேல்முருகன் ஆகியோர் சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தனர்.
இதற்குப் பதிலளித்து பேசிய உணவுத் துறை அமைச்சர் சக்ரபாணி, "நேரடி கொள்முதல் நிலையம் கடந்த ஆட்சிக்காலத்தில் திறப்பதற்கான விதிமுறை பின்பற்றவில்லை. நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க ஏழு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்களிடத்தில் மக்களோ, மாமன்ற உறுப்பினர்களோ தெரிவிக்கும் பட்சத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும்.
கடந்த ஐந்து நாள்களாக மழை பெய்கிறது, சூறாவளி காற்று வீசுகிறது. இதனால் 31,250 தார்பாய்கள் நெல் கொள்முதல் நிலையங்களுக்கு வழங்கபட்டுள்ளன. ஒரு லட்சத்து 20 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் திறந்தவெளி கொள்முதல் நிலையத்தில் உள்ளது. நெல் கொள்முதல் நிலையங்கள் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளன.
மதுரை, சிவகங்கை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் பெய்த மழையால் கொள்முதல் செய்யப்பட்ட நெல்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. 16 மண்டலங்களில், 106 திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையங்கள் தயார் நிலையில் உள்ளன. கொள்முதல் செய்யப்பட்ட நெல் உடனடியாக அரவை ஆலைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: '1000 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள நியாயவிலைக் கடைகள் பிரிப்பது குறித்து அரசு பரிசீலனை'