சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது பேசிய திமுக உறுப்பினர் நல்லதம்பி, திருப்பத்தூர் கலைக்கல்லூரி வளாகத்தில் ஆவின் பாலகம் அமைக்க அரசு முன்வருமா என்றும், 200 கல்லூரிகளில் பாலகம் அமைக்கப்படும் என்று கடந்த கூட்டத்தொடரில் அமைச்சர் தெரிவித்திருந்ததன் நிலை என்ன என்றும் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, திருப்பத்தூர் கலைக்கல்லூரி வளாகத்தில் ஆவின் பாலகம் அமைக்கக் கல்லூரி நிர்வாகத்திடம் இருந்து அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும், விரைவில் ஆவின் பாலகம் அமைக்கப்படும் என்றும் கூறினார். ஏற்கனவே கூறியிருந்ததைவிட தற்போது 206 கல்லூரிகளில் ஆவின் பாலகம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். கோரிக்கையின் அடிப்படையில், கல்லூரி வளாகங்களில் பாலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, புதிதாகப் பிரிக்கப்பட்ட மாவட்டமான திருப்பத்தூரில், 69 பால் உற்பத்திக் கூட்டுறவு சங்கங்கள் உள்ளதாகவும், அதில் 47 சங்கங்கள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளதாகவும் தெரிவித்தார். தினமும் 7,800 உற்பத்தியாளர்கள் மூலம் 28,000 லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது என்ற அவர், அவற்றை குளிரூட்டத் தேவையான அளவிற்கு குளிரூட்டு நிலையங்கள் உள்ளதாகவும் கூறினார். இதற்கு மேலும் பால் உற்பத்தி அதிகரித்தால் அங்கு தேவைக்கேற்ப, பால் குளிரூட்டு நிலையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'கருத்தடை சிகிச்சை செய்ய ஆண்களும் முன்வரவேண்டும்' - அமைச்சர் விஜயபாஸ்கர் அழைப்பு