சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் மன்னார்குடியை சேர்ந்த 25 வயது இளம்பெண் பணியாற்றிவந்தார். அவருக்கு திருப்பூரை சேர்ந்த அரவிந்த்குமார் என்பவர் தன்னை காதலிக்குமாறு தொல்லை கொடுத்துவந்தார்.
இந்த நிலையில் அந்த பெண் சொந்த ஊருக்கு செல்ல கோயம்பேடு பேருந்து நிலையத்தில் காத்திருந்தபோது, அரவிந்த்குமார் தன்னை காதலிக்க சொல்லி மிரட்டியதோடு, மறைத்து வைத்திருந்த கத்தியால் தாக்கிவிட்டு சென்றார்.
இந்த சம்பவம் 2016ஆம் ஆண்டு நடந்தது. இதுகுறித்து கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அரவிந்த்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு சென்னை மகளிர் நீதிமன்றத்தில் நடந்துவந்தது.
இந்த நிலையில் இன்று (ஏப். 5) அரவிந்த்குமாருக்கு எதிராக குற்றம் நிரூபிக்கப்பட்டது. அதனடிப்படையில், நீதிபதி முகமது பாரூக், குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும், 10 ஆயிரத்து 500 ரூபாய் அபராதமும் விதித்தார்.
அந்தத் தொகையை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடாக வழங்க உத்தரவிட்டார். இதையடுத்து நீதிபதி கூறுகையில், "காதலிக்க மறுக்கும் பெண்கள் தாக்கப்படும் சம்பவம் கடும் கண்டனத்துக்குரியது. இதுபோன்ற சம்பவங்கள் ஒட்டுமொத்த பெண்கள் மத்தியில் பெரும் அச்சத்தை உருவாக்கும்.
அவர்களின் முன்னேற்றத்துக்கும் தடையாக இருக்கும். இதனை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது. இதுபோன்ற சம்பவங்களை அரசும், காவல்துறையும் இரும்புக்கரம் கொண்டு தடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: உயர்நீதிமன்றம் முன்பே ஆக்கிரமிப்பா?-அதிரடி உத்தரவு