தமிழ்நாட்டில் உள்ள மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சிபிஎஸ்இ நிர்வாகத்தின்கீழ் மாறுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இதற்காக மாநிலப் பாடத்திட்டத்தின்கீழ் இயங்கிய மெட்ரிக்குலேஷன் வகுப்புகளை மூடிவிட்டு, சிபிஎஸ்இ அங்கீகாரம் பெறுவதற்கு முயற்சித்துவருகின்றன. மேலும் பள்ளியை மூடுவதால் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் கடும் பாதிப்பு ஏற்படுகிறது.
இந்நிலையில் சென்னை தியாகராய நகரில் உள்ள வெங்கடேஷ்வரா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியை மூடுவதாக நிர்வாகம், பெற்றோர்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது. அதனடிப்படையில் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் கருப்புசாமியைச் சந்தித்து பெற்றோர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
அதனைப் பெற்றுக்கொண்ட கருப்புசாமி கூறும்போது, "பெற்றோர்கள் ஒப்புதல் இல்லாமல் பள்ளியை மூட முடியாது. அப்படி ஒரு நடவடிக்கையை நிர்வாகம் எடுத்தால் அதற்கு கல்வித் துறை அனுமதி வழங்காது.
முறையாக அனைத்துப் பெற்றோர்களிடமும் கையெழுத்துப் பெற்று, மாவட்டக் கல்வி அலுவலர், முதன்மைக் கல்வி அலுவலர் ஆகியோர் பரிந்துரைத்தால் மட்டுமே பள்ளியை மூடுவதற்கு ஒப்புதல் வழங்க முடியும் எனவும், இல்லையென்றால் அனுமதி வழங்க முடியாது" என்றார்.
ஆயிரம் மாணவர்கள் பள்ளியில் படித்துவரும் நிலையில், திடீரென்று மூடுவதாக நிர்வாகம் தெரிவித்திருப்பதால், பெற்றோர்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகப் பெற்றோர்கள் தெரிவித்தனர்.