சென்னை: நாடு முழுவதும் தேசிய மருத்துவர்கள் தினம் இன்று கொண்டாடப்பட்டுவருகிறது. தன்னுயிரை பணயம் வைத்து மக்கள் உயிரை காக்கும் மருத்துவர்களுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலகினர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.
798 மருத்துவர்கள் உயிரிழப்பு
கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா பெருந்தொற்றினால் மருத்துவர்கள் பலர் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதுவரை 798 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவர் சங்கம் அண்மையில் அதிர்ச்சி தகவலை வெளியிட்டது.
அந்த தகவலின்படி, தலைநகர் டெல்லியில் அதிகப்பட்சமாக 128 மருத்துவர்களும் பிகாரில் 115 மருத்துவர்களும் உத்தரப் பிரதேசத்தில் 79 மருத்துவர்களும் உயிரிழந்துள்ளனர்.
மருத்துவர்களுக்கு அஞ்சலி
கரோனா பெருந்தொற்று காரணமாக உயிரிழந்த மருத்துவர்களுக்கு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதல்வர் ஜெயந்தி தலைமையில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.
மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து பொதுமக்கள் அனைவரும் கரோனா விதிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என மருத்துவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
இதையும் படிங்க: தேசிய மருத்துவர் தினம்- யார் இந்த பி.சி ராய்!