சென்னை : கூடங்குளம் அணுமின் நிலையம் விரிவாக்கம் மற்றும் அணுக்கழிவு வெளியேற்றம் தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்றது.
அதில், மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பு தலைவர் மேதா பட்கர், மனித நேய மக்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஜவஹாருல்லா, மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன், அணு சக்திக்கெதிரான மக்கள் இயக்கத்தின் தலைவர் சுப. உதயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொழில்நுட்பம் கிடையாது
இந்த கூட்டத்தில் முதலில் பேசிய உதயகுமார், "கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு மக்கள் ஆரம்பத்திலிருந்தே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கூடங்குளம் அணு மின் நிலையத்தில் அலகு "மூன்று மற்றும் நான்கு" திட்டப் பணிகள் தொடங்கியுள்ளது. இது போக 5 மற்றும் 6 ஆம் அலகு தொடங்குவதற்கான ஆரம்ப பணிகளை முன்னெடுத்துள்ளனர். அணு கழிவைக் கையாளும் தொழில்நுட்பம் கிடையாது.
இது குறித்து, நாடாளுமன்ற உறுப்பினர்களும், அரசியல் ஆளுமைகளும் நாடாளுமன்றத்தில் முறையிட்டபோது, 'மத்திய இணை அமைச்சர் ஜிஜேந்திர சிங் (அணுசக்தி துறை மற்றும் விண்வெளித் துறை அமைச்சர் ) இடைநிலை மறு சுழற்சி மையம், நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பாதிக்கப் படாது' என்றும், சுற்றுச்சூழலுக்கோ, பொதுமக்களுக்கோ, தொழிலாளர்களுக்கோ எந்த கெடுதலும் வராது என வாய்மொழியில் கூறியுள்ளார். சுழற்சி மற்றும் மூடப்பட்ட அணு கழிவு அமைப்பைப் பின்பற்றுவதால் இங்குப் பிரச்சினை எதுவும் வராது என அமைச்சர் கூறியுள்ளார்.
வெள்ளை அறிக்கை வேண்டும்
மேலும், இது உண்மைக்குப் புறம்பான தகவல். கூடங்குளம் அணுமின் நிலையத்தின் விரிவாக்கப் பணிகளைத் தடுத்து நிறுத்த வேண்டும். முதல் இரண்டு நிலையத்தின் செயல்பாடுகள் குறித்த வெள்ளை அறிக்கை வேண்டும். மேலும், அணு கழிவுகளைச் சேகரிக்கும் தொழில்நுட்பம் குறித்த விரிவான அறிக்கையை வேண்டும்" எனக் கோரிக்கை வைத்தார்.
தமிழ்நாட்டில் -2 இந்தியாவில்-7
அதனை தொடர்ந்து பேசிய மேதா பட்கர், "மீனவர்கள், பொதுமக்கள், உயிரினங்கள் அணு கதிரியக்கத்தால் அதிகமாகப் பாதிக்கப்படுவர். கிளாஸ்கோ கால நிலை மாநாட்டில் 2070 கார்பன் உமிழ்வு இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என பிரதமர் கூறியுள்ளார். பருவமழை பிரச்சினைகளைக் கட்டுப்படுத்துவதற்கு திட்டங்கள் உள்ளதாகவும் தெரிவித்தார். தமிழ்நாட்டில் மட்டும் 2 அணு மின் நிலையம் உள்ளது.
கதிரியக்கத்தால் மக்களின் உடல் நிலை பாதிக்கப்படும் என்பது அறிவியல் பூர்வமாக உறுதியாகியுள்ளது. அணு கழிவுகளைக் கையாள்வதற்கு நம்மிடம் தொழில்நுட்பம் இல்லை. நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராகவும் குரல் எழுப்ப வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இயற்கை வளங்களை அழிப்பதால் அது நமக்கே பாதிப்பை ஏற்படுத்தும். எனவே முதலமைச்சர் ஸ்டாலின் விரைந்து கூடங்குளம் அணு கழிவு மற்றும் தேனி மாவட்டம் நியூட்ரினோ திட்டம் குறித்து மக்களைக் காக்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
ஸ்டெர்லைட் தொழிற்சாலை
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஸ்டெர்லைட் நிறுவனத்தால் தொழிற்சாலை தொடங்க முடியவில்லை. ஏனெனில், அங்குள்ள மக்களின் எதிர்ப்பால் நடைபெறவில்லை. ஸ்டெர்லைட் போன்ற தொழிற்சாலையால் நீர், காற்று, நிலம் என இயற்கை வளங்கள் பாதிக்கப்படுகிறது. அரசியல்ரீதியாக இயற்கையும், இயற்கையால் படைக்கப்பட்ட மக்களையும் உயிர்களையும் அழிக்க முற்படுகிறார்கள். தொழிற்சாலையை எதிர்த்துப் போராடுபவர்கள் மீது பொய் வழக்குகள் போடுகிறார்கள், மிரட்டுகிறார்கள்.
நான்கு ரியாக்டர்கள் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருப்பதாகக் கூறுகிறார்கள். ஆனால் அது எவ்வாறு செயல்படுகிறது. அணுக் கழிவுகளைச் சேகரிக்க அதன் கதிர் இயக்கத்தைக் கட்டுப்படுத்த எவ்வாறு செயல்படுகிறது என்பது பற்றிய விளக்கம் இல்லை. சாதிகள் தங்கள் போராட்டத்தைத் தந்திரமாக நிறுத்தவில்லை தற்காலிகமாகத்தான் நிறுத்தி உள்ளார்கள். மோடி அரசின் வாய்வழி வாக்குகளை நம்பக்கூடாது.
நம்பிக்கை
முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்துப் பேசியபோது நம்பிக்கையாக இருந்தது. எங்களது கோரிக்கையைப் பொறுமையாகக் கேட்டார். அனைத்தையும் பரிசீலனை செய்வதாக வாக்குறுதி கொடுத்துள்ளார். இந்தியாவில் எந்த மாநிலமும் செய்யாத ஒன்றைத் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செய்ய வேண்டும். மக்கள் விரோத திட்டங்களையும் சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்கும் திட்டங்களையும் ஒலிக்க வேண்டும் என்று கூறினார்.
இதையும் படிங்க: 'நெற்றியில் பட்டை அடித்துக்கொண்டால் சேகர்பாபுவின் பழைய வரலாறு மறந்துவிடுமா?'