இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத்திய அரசின் மின்சாரத் துறை சட்டத் திருத்தங்கள் விவசாயிகளின் வயிற்றில் அடிக்கின்றது என்றால், தமிழ்நாடு அரசின் மின் கட்டணம் தொடர்பான அரசாணை, விவசாயிகளின் தலையில் கல்லைப் போட்டு ஒரேயடியாக ஒழிப்பதற்கு வழி செய்கிறது. பருவ மழை பொய்த்துப் போவதால், ஆழ்துளைக் கிணறுகளை நம்பித்தான் நீர்ப்பாசனம் செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் நிலத்தடி நீர் பெரும்பாலான மாவட்டங்களில் ஆயிரம் அடிக்குக் கீழே போய்விட்டது. ஆழ்துளைக் கிணறுகள் பயன்படுத்தும் விவசாயிகள், மின் மோட்டார் வைத்து நீர் இரைத்து பயிர் சாகுபடி செய்யும் நிலைதான் இருக்கின்றது.
கிணற்றுப் பாசனத்தை நம்பி இருக்கும் விவசாயிகள், அரசு ஏற்கனவே அனுமதித்துள்ள 5 மற்றும் 7.5 குதிரைத் திறன் கொண்ட மின் மோட்டார்களைப் பயன்படுத்தி வருகின்றனர். மத்திய அரசு இலவச மின்சாரத்தை ரத்து செய்து இருக்கும் நிலையில், எடப்பாடி பழனிசாமி அரசு தன் பங்கிற்கு அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதல் குதிரைத் திறன் மின் மோட்டார்களைப் பயன்படுத்தும் விவசாயிகளுக்கு குதிரைத்திறன் ஒன்றிற்கு ரூ.20 ஆயிரம் கட்டணம் நிர்ணயித்துள்ளது. அதற்கு ‘தட்கல் திட்டம்’ என்று கூறி அரசாணையும் வெளியிட்டுள்ளது. இது மிகவும் அநியாயமாகும்.
வேளாண்மையைப் பாதுகாக்க இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்குவதும், கூடுதல் குதிரைத்திறன் மோட்டார் பயன்பாட்டுக்குக் கட்டணம் இல்லாமல் மின் விநியோகம் செய்வதும் தமிழ்நாடு அரசின் கடமை” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 'பத்திரிகையாளர்களுடன் எப்போதும் திமுக துணை நிற்கும்' - ஸ்டாலின்