கரோனா ஊரடங்கு காரணமாக, புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் இறுதியில் மூடப்பட்ட மதுக்கடைகள் மே மாதம் 25ஆம் தேதி திறக்கப்பட்டது. அப்போது, தமிழ்நாடு மதுபானங்களுக்கு நிகராக, புதுச்சேரி மதுபானங்களின் விலை இருக்கும்படி ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை, மூன்று மாதங்களுக்கு உயர்வோடு விற்பனை செய்யப்பட்டது.
இந்த விலை உயர்வு புதுச்சேரி மதுப்பிரியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த வரிவிதிப்பு செப்டம்பர் மாதம் முதல் மேலும் மூன்று மாதங்களுக்கு அதாவது நவம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
இந்தக் கரோனா வரிவிதிப்பு இன்று(நவ.30) முப்பதாம் தேதியுடன் நிறைவடைந்தது. இதற்கிடையில் மதுபான உரிமையாளர்கள் நேற்று(நவ.29) முதலமைச்சர் நாராயணசாமியை சந்தித்துப் பேசினர். அப்போது, 'கரோனா வரிகளை ரத்து செய்துவிட்டு, அதற்கு பதிலாக எம்.ஆர்.பி விலையில் 10 முதல் 15 விழுக்காடு வரை உயர்த்தலாம்' என கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து, மதுபானங்களுக்கு அமலில் இருந்த கரோனா வரியை ரத்து செய்துவிட்டு, அதற்குப் பதிலாக 15 விழுக்காடு வரை விலை உயர்த்துவதற்கான கோப்பு துணைநிலை ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதற்கிடையே, இன்று(நவ.30) ஆளுநர் கிரண்பேடி வெளியிட்டுள்ள அறிவிப்பில், மதுபானங்கள் மீது இருந்த கரோனா வரி இரண்டு மாதங்களுக்குத் தொடர்வது எனவும்; தற்போது உள்ள அதே வரியை 2021ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி வரை தொடர்வது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:புதுச்சேரியில் மது விலை உயர்வு! - அமைச்சர் நமச்சிவாயம் தகவல்