சென்னை: சாமி இயக்கத்தில் உருவாகியுள்ள அக்கா குருவி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்துள்ளார். இப்படம் ஈரானிய இயக்குனர் மஜித் மஜிதி இயக்கிய சில்ரன் ஆஃப் ஹெவன் படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக் ஆகும். இவ்விழாவில் இயக்குனர் அமீர், பார்த்திபன், நடிகர் ஆதி, பிடி.செல்வகுமார், ஆதம்பாவா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
விழாவில் பேசிய இயக்குனர் அமீர்," இவ்விழாவிற்கு வந்ததின் முதல்நோக்கம் சாமி என்ற படைப்பாளிக்காக அல்ல. சாமி எடுத்துள்ள இந்த படைப்புக்காக. உலகையே திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் மஜித்மஜிதி. தமிழ் சினிமாவில் எழுதப்படாத விதி உண்டு. கதை, திரைக்கதை, வசனம் என அனைத்தையுமே இயக்குனர் செய்ய வேண்டும்.
மற்ற மொழிகளில் வெற்றியடைந்த மாஸ் படங்களை தமிழில் செய்தால் கொண்டாடுவார்கள். ஆனால் இதுபோன்ற கலைப்படங்களை எடுத்தால் தூற்றுவார்கள். இப்படத்தை எடுக்க எனக்கும் தோன்றியது. ஆனால் இங்கு கலர் கலராக சட்டை அணிந்துகொண்டு விமர்சனம் செய்ய ஆள் இருக்கிறார்கள். இந்த படத்தை பார்த்துவிட்டு யாரும் குறை சொல்ல முடியாது.
இப்படத்தின் இசையை பார்த்து மஜித் மஜிதி மிகவும் புகழ்ந்து பேசினார். இது ஐந்து பாரதரத்னா விருதுக்கு சமம். இளையராஜாவுக்கு இதைவிட வேறு எந்த பாரத ரத்னாவோ, ஆளுநர் பதவியோ, ஜனாதிபதி பதவியோ ஈடாகாது" என்று தெரிவித்தார்.
பின்னர் பேசிய இயக்குனர் சாமி, மிகவும் கஷ்டப்பட்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் இப்படத்தை ஓட வைத்தால் இதே பாதையில் பயணிப்பேன். இல்லை என்றால் மீண்டும் பழைய பாதைதான். மீண்டும் உயிர், மிருகம், சிந்து சமவெளி போன்று இரண்டு மடங்கில் படம் எடுப்பேன் என தெரிவித்தார்.
இதையும் படிங்க:இளையராஜாவின் தகுதிக்கு பாரத ரத்னாவே குறைவுதான் - அண்ணாமலை