சென்னை: முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்றதும் கரோனா நிவாரண நிதியாக குடும்ப அட்டைதாரர்களுக்கு, ரூ.4000 நிதி உதவி அளிக்கப்படும் என அறிவித்தார். அதன்படி முதல் தவணையாக இரண்டாயிரம் ரூபாய் கடந்த மே மாதம் வழங்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3ஆம் தேதி இரண்டாம் தவணையாக இரண்டாயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தையும் 14 பொருள்கள் அடங்கிய மளிகைப் பொருள்கள் தொகுப்பு வழங்கும் திட்டத்தையும் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
இந்தத் திட்டத்திற்கான டோக்கன்கள் ஜூன் 11ஆம் தேதிமுதல் விநியோகம்செய்யப்பட்டன. கரோனா பரவல் காரணமாக ரேஷன் கடை ஊழியர்களே வீடு வீடாகச் சென்று டோக்கன்களை விநியோகம்செய்தனர். ரேஷன் அட்டைதாரர்களுக்கு 14 மளிகைப்பொருள்கள் வழங்கும் திட்டத்தில்,
- சர்க்கரை - 500 கிராம்
- கோதுமை – 1 கிலோ
- உப்பு - 1 கிலோ
- ரவை - 1 கிலோ
- உளுத்தம் பருப்பு - 500 கிராம்
- புளி - 250 கிராம்
- கடலை பருப்பு - 250 கிராம்
- டீத்தூள் - 200 கிராம்
- கடுகு - 100 கிராம்
- சீரகம் - 100 கிராம்
- மஞ்சள் தூள் - 100 கிராம்
- மிளகாய் தூள் - 100 கிராம்
- குளியல் சோப்பு 25 கிராம் – 1
- துணி துவைக்கும் சோப்பு (250 கிராம்) - 1
ஆகிய பொருள்கள் அடங்கும். அதன் அடிப்படையில் ரேஷன் கடைகளில் டோக்கன் பெற்ற அனைவருக்கும் ஜூன் 15ஆம் தேதிமுதல் மளிகைப்பொருள்கள், கரோனா இரண்டாவது தவணை விநியோகம் செய்யப்பட்டுவருகிறது.
இந்நிலையில் ஜூன் 25ஆம் தேதிக்குள் கரோனா நிவாரண நிதி, 14 மளிகைப் பொருள்கள் அளிக்கப்பட வேண்டும் எனத் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி இன்றுடன் இத்திட்டம் முடிவடைகிறது.
இதனால் இதுவரை இரண்டாம் தவணை கரோனா நிவாரண நிதி, 14 வகையான மளிகைப் பொருள்கள் பெறாத பொதுமக்கள் ரேஷன் கடைகளில் குவிந்துவருகின்றனர்.
இதையும் படிங்க: '50 நாள்களில் முதலமைச்சரின் 50 சிறப்புத் திட்டங்கள்'